ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு வனத்துறை அறிவுரை

உடுமலை, செப். 19:  ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தவும், விலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். உடுமலை அருகே ஒன்பதாறு செக்போஸ்டில் இருந்து மூணாறு செல்லும் சாலையில், உடுமலை வனச்சரக பகுதியில் ஏழுமலையான் கோயில் உள்ளது. தென்திருப்பதி என்றழைக்கப்படும் இந்த கோயில் வனப்பகுதியில் அமைந்துள்ளது. ஏழுமலையான் கோயில் பிரிவில் இறங்கி, சுமார் 5 கிமீ தூரம் நடந்து கோயிலுக்கு செல்ல வேண்டும். புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் இங்கு செல்ல வனத்துறை அனுமதி அளித்துள்ளது.  வழக்கமாக வாகனங்களில் வருபவர்களும், சிறப்பு பேருந்துகளில் வருபவர்களும் ஏழுமலையான் கோயில் பிரிவில் இறங்கி நடந்து செல்வார்கள். வாகனங்களை அங்கேயே பார்க்கிங் செய்வார்கள். இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக கூறி, இந்த முறை செக்போஸ்ட் பகுதியிலேயே இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு நடந்து செல்ல வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.  பேருந்துகளில் செல்பவர்கள் மட்டும் ஏழுமலையான் கோயில் பிரிவு வரை செல்லலாம்.

வாகனங்களில் வருபவர்கள் கூடுதலாக ஒரு கிமீ தூரம் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் படர்ந்திருந்த முட்செடிகள் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு பக்தர்கள் அனைவருக்கும் வனத்துறை சார்பில் துணிப்பை வழங்கப்பட்டது.இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பக்தர்கள் பிளாஸ்டிக் பைகளை கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகளுக்கு எந்த தொந்தரவும் செய்யக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர். பக்தர்கள் வசதிக்காக அடிவார பகுதியில் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இவற்றை கேன்களில் பிடித்து கொண்டு செல்லலாம். தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: