கும்பகோணம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவு

கும்பகோணம், செப். 19: கும்பகோணம் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்று பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து கூறினார். முதல்வரின் குடிமராமத்து திட்டம் 2019- 20ன் கீழ் பொதுப்பணித்துறையின் நீர்வளத்துறை சார்பில் காவிரி வடிநில கும்பகோணம் உபகோட்டம் அளவிலான தூர்வாரும் பணிகள் பல்வேறு இடங்களில் நடந்து பாசன வாய்க்கால்களில் காவிரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த பணிகள் ஆங்காகே உள்ள விவசாய சங்கம் மேற்பார்வையில் நடந்தது. இந்த பணிகளில் பெருமளவு முடிவடைந்த நிலையில் வாய்க்கால்களில் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த பணிகளை காவிரி வடிநில கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் மாரிமுத்து நேற்று பார்வையிட்டார். இதைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், முதல்வரின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ள ஆறுகள், வடிகால்கள், வாய்க்கால்கள் என மொத்தம் 132 கிலோ மீட்டர் தூரத்துக்கு ரூ.1 கோடியே 53 லட்சத்து 6 ஆயிரம் செலவில் தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. மேலும் ரூ.1 கோடியே 37 லட்சத்து 25 ஆயிரம் செலவில் 6 கட்டுமான பணிகள் நடைபெற்று 5 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு பணி நடந்து வருகிறது. மேலும் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் 3 அடைப்பு பலகை பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 9,200 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும்.

Advertising
Advertising

மேலும் முதல்வரின் சிறப்பு தூர்வாரும் பணிகளின்கீழ் காவிரி வடிநில கும்பகோணம் மற்றும் ஆற்று பாதுகாப்பு உபகோட்டம் பழவாற்கோவிலாச்சேரி கிராமத்தில் 6 கிலோ மீட்டர் தூரத்துக்கும், சுந்தரபெருமாள் கோவில், திருவலஞ்சுழி, பட்டீஸ்வரம், கொற்கை, தேனாம்படுகை, உடையாளூர், துக்காச்சி ஆகிய கிராமங்களில் அரசலாறு 8.6 கிலோ மீட்டர் தூரமும், திருமலைராஜன் ஆறு 13.4 கிலோ மீட்டர் தூரமும், முடிகொண்டான் ஆறு 1.6 கிலோ மீட்டர் தூரத்துக்கான பணிகள் எடுத்து கொள்ளப்பட்டன. அதில் அரசலாறு 3.3 கிலோ மீட்டரும், முடிகொண்டான் ஆறு 1.6 கிலோ மீட்டரும், பழவாறு 6 கிலோ மீட்டர் துாரத்துக்கு ரூ.2.29 கோடியில் தூர்வாரும் பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதத்தில் துவங்கி முடிக்கப்படும். இதுவரை ரூ.6 கோடி மதிப்பில் தூர்வாரும் பணிகள் நிறைவடைந்துள்ளன என்றார்.

Related Stories: