சர்வர் பிரச்னையால் முடங்கிய காவல்துறை இணையதளம்

சாயல்குடி, செப். 10:  ாமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறை இணையதளம் சர்வர் பிரச்சனையால் முடங்கியதால் பொதுமக்கள் ஆன்லைன் மூலம் அவசர வசதிகளை பெற முடியாமல் அவதிப்பட்டு வருவதாக புகார் கூறுகின்றனர். ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை, முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி, திருவாடானை ஆகிய துணை காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றின் கீழ் 43 காவல்நிலையங்கள் உள்ளன.காவல்துறையை நவீனப்படுத்தும் விதமாகவும், பொதுமக்கள் எளிதாகவும், விரைவாகவும், காவல்துறையின் உதவிகளை பெறுவதற்காக காவல்நிலையங்களில் ஆன்லைன் வசதி நடைமுறையில் உள்ளது.

இந்த வசதியின் மூலம் பொதுமக்கள் பாஸ்போர்ட், லைசென்ஸ், பள்ளி சான்றுகள் உள்ளிட்ட தொலைந்து போகும் சான்றுகளை கண்டுபிடித்து தரக்கோரி காவல்துறை ஆன்லைன் செயலியில் விண்ணப்பித்து புகார் அளித்து, சம்மந்தப்பட்ட காவல்நிலையம் புகார் மனு மீது உரிய விசாரணை மேற்கொண்டு, அதன்பின் மனுதாரரிடம் அதற்கான மனு ரசீதுகளை அளித்து வந்தனர். இதனால் பொதுமக்கள் சுலபமாக காவல்துறையில் தீர்வு கண்டு வந்தனர்.

ஆனால் கடந்த சில நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து தலைமையிட காவல்நிலையங்களிலும் காவல்துறை இணையதள சர்வர் முடங்கி கிடக்கிறது. இதனால் புகார்தாரர் மனு அளித்தும், மனு ரசீது பெற்று, தீர்வு காணமுடியாமலும், அவசர சான்றுகளை பெற முடியாமலும் அவதிப்பட்டு வருவதாக கூறுகின்றனர்.

பள்ளிச்சான்றுகள், பாஸ்போர்ட் உள்ளிட்ட அவசர சான்றுகள் தொலைந்து போனது குறித்து புகார் மனு அளித்தும் காலதாமதம் ஏற்பட்டு வருவதால் வெளிநாடு வேலைவாய்ப்புகள், அரசு வேலை வாய்ப்புகளை இழந்து வருவதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.எனவே மாவட்டத்திலுள்ள காவல்நிலையங்களில் ஏற்பட்டுள்ள இணையதள சர்வர் பிரச்சனையை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர சான்றுகள் தொலைந்தது மீதான புகார் மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு உடனடியாக மனு ரசீது வழங்க எஸ்.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: