திருப்பரங்குன்றம் அருகே குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

திருப்பரங்குன்றம், செப்.10: திருப்பரங்குன்றம் அருகில் உள்ள சோளங்குருணியில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சோளங்குருணி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக குடிநீர் வசதி செய்யப்பட்டிருந்தது. கடந்த ஒரு வருடமாக காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலமாக முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. அதே நேரத்தில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்ட நிலையில், போதிய மழை இல்லாததால் ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீர் சப்ளை செய்யவில்லை.இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் எம்எல்ஏ டாக்டர் சரவணன் சொந்த செலவில் லாரி மூலம் தண்ணீர் விநியோகம் செய்துள்ளார். ஆனால் அந்த நீரும் முழுமையாக தண்ணீர் பிரச்னையை தீர்க்க முடியாததால் இது குறித்து கிராம மக்கள் பலமுறை ஊராட்சி செயலர் உள்ளிட்ட ஒன்றிய அலுவலர்களிடம் புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் நேற்று காலை 100க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட சுமார் 250 பேர் காலி குடங்களுடன் விராதனூர் வலையங்குளம் சாலையில் அமர்ந்து சாலைகளில் மரங்களை போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் காவிரி கூட்டு குடிநீர் அதிகாரிகள் கிராமமக்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertising
Advertising

Related Stories: