மதுரை மாற்றுத்திறனாளிகள் அணி 78 பதக்கங்கள் குவித்து சாதனை

மதுரை, செப்.10: மதுரை மாற்றுத்திறனாளிகள் அணி தங்கம் உள்பட 78 பதக்கங்களை குவித்து சாதனை படைத்ததால், வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. பாரா ஒலிம்பிக் கமிட்டி ஆப் இந்தியா மூலம் அங்கீகரிக்கப்பட்ட தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்கம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி காரைக்குடியில் நடந்தது. இப்போட்டியில் 26 மாவட்டங்களில் இருந்தும் 600க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வீரர்கள் கலந்து கொண்டனர்.இதில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 65 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில் 28 தங்கப்பதக்கங்கள், 31 வெள்ளி மற்றும் 19 வெண்கல பதக்கம் பெற்று அதிக புள்ளிகளை மதுரை மாவட்ட அணி பெற்றது. மேலும் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் மதுரை மாவட்ட தடகள அணி பெற்றது. சாதனை படைத்த மதுரை தடகள அணி வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டு விழா மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. ஜவுளி அதிபர் செல்வராஜ் தலைமை வகித்தார். வக்கீல் சாமிதுரை முன்னிலை வகித்தார். மதுரை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலவாழ்வு சங்க தலைவர் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: