விவசாயத்தில் நுண்ணூட்ட சத்துகளின் பயன்கள்

பாபநாசம், செப். 10:  அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குநர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெல் சாகுபடிக்காக வருடத்தில் 4 மாதங்கள் தண்ணீரில் மூழ்கி பின் வடிக்கப்படுகிறது. இவ்வாறு தண்ணீரில் மூழ்கி வடிக்கப்படும் மண் வகைகளில் நுண்ணூட்ட சத்துக்களான போரான், இரும்பு, மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம், துத்தநாகம் போன்றவை கரைந்து சென்று விடும். இதை ஈடு செய்யும் விதமாக தமிழ்நாடு அரசு வேளாண்மைத்துறை மூலமாக 1990ம் ஆண்டு முதல் நெல்லுக்கான நுண்ணூட்ட உரம், குடுமியான்மலை மத்திய கட்டுப்பாட்டு ஆய்வத்திலிருந்து தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்த நெல் நுண்ணூட்ட உரத்தில் துத்தநாகம் 3 சதம், மக்னீசியம் 4 சதம், இரும்பு, மாங்கனீசு தலா 0.3 சதம், போரான் 0.2 சதம், தாமிரம் 0.4 சதம் உள்ளன. நெல் நடவு வயலில் ஏக்கருக்கு 5 கிலோ நெல் நுண்ணூட்ட உரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து மேலாக இட்டு உடன் நடவு செய்ய வேண்டும். இவ்வாறு நுண்ணுட்ட உரத்தை மேலாக இடும்போது அதிலுள்ள நுண்சத்துக்கள் உடன் பயிருக்கு கிடைத்து விடும். அவ்வாறு இல்லாமல் நுண்ணுட்ட உரத்தை இட்டப்பின் உழவு செய்தால் அந்த நுண் சத்துக்கள் பயிருக்கு கிடைக்காத ஆழத்துக்கு சென்று வீணாகி விடும். நடவு வயலில் இட முடியாத விவசாயிகள் நடவு செய்து 10 நாட்கள் வரை ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணுரத்தை 20 கிலோ மணலுடன் கலந்து நடவு வயலில் இடலாம். 1990ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து நெல் நுண்ணூட்ட உரம் விவசாயிகளிடையே மிகவும் விரும்பப்படும் ஒரு உரமாக உள்ளது. நுண்ணூட்ட சத்து உரம் இடுவதால் ஏற்படும் நன்மைகளை விவசாயிகள் அனுபவ ரீதியாக உணர்ந்து விட்டதால் அவர்கள் விரும்பி வந்து விரிவாக்க மையங்களை அணுகி பெற்று பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து விரிவாக்க மையங்களிலும் கிலோ ரூ.41.11க்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: