உத்திரமேரூர் அருகே ஆடு திருடிய 2 பேருக்கு பொதுமக்கள் தர்மஅடி

உத்திரமேரூர், செப்.10: கொட்டகையில் இருந்த ஆட்டை திருடிய 2 பேரை பிடித்து பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.உத்திரமேரூர் அடுத்த சோமநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வேண்டா (47). இவரது வீட்டில் ஆடுகள் வளர்த்து வருகிறார். அதில், 50க்கும் மேற்பட்ட வெள்ளாடுகள் உள்ளன. இந்த ஆடுகளை தனது வீட்டின்  பின்புறம் கொட்டகை அமைத்து பராமரித்து வருகிறார்.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேண்டாவின் வீட்டின் பின்புறத்தில் இருந்த கொட்டகையில் இருந்து ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டது. இதனால் சந்தேகமடைந்த அவர், அங்கு சென்று பார்த்தார்.  அப்போது அங்கு மர்மநபர்கள் 2 பேர், கொட்டகையில் இருந்த ஆட்டை திருடி செல்வதை கண்டு அதிர்ச்சியடைந்தர்.

உடனே திருடன் திருடன் என அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர், 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் உத்திரமேரூர்  போலீசாரிடம், அவர்களை ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், ஆணைப்பள்ளத்தை சேர்ந்த சுரேஷ் (26), மருதம் கிராமத்தை சேர்ந்த ரவி (55) என தெரிந்தது. இதையடுத்து போலீசார், இதுபோல் வேறு எங்கு ஆடுகளை திருடியுள்ளனர். இவர்களுக்கு வேறு திருட்டு சம்பவத்தில்  தொடர்பு உள்ளதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: