முக்கிய சந்திப்புகளில் கலெக்டர், சீனியர் எஸ்பி திடீர் ஆய்வு

புதுச்சோி,  ஆக. 22: புதுவையில் வாகன எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து  வரும் நிலையில் முக்கிய சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல்  ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.  குறிப்பாக தமிழக பகுதிகளில் இருந்து பஸ்கள் வந்து செல்லும் வழித்தடங்களான  இசிஆர், திண்டிவனம் ரோடு, விழுப்புரம் சாலை, கடலூர் ரோடு உள்ளிட்டவற்றில்  அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. தனியார் பஸ்கள் டைமிங் பிரச்னையால்  அதி வேகத்தில் செல்வதால் சாலைகளில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள்  அச்சத்துடன் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதையடுத்து பஸ் ரூட்களை  மாற்றியமைப்பது தொடர்பான ஒத்திகயைில் போக்குவரத்து போலீசார் சில  வாரங்களுக்கு முன்பு ஈடுபட்டனர்.  இந்த நிலையில் புதுச்சேரியில் பஸ்கள்  வந்து செல்லும் முக்கிய சாலைகளில் மாவட்ட கலெக்டர் அருண், சீனியர் எஸ்பி  (சட்டம்-ஒழுங்கு) ராகுல் அல்வால் ஆகியோர் நேற்று திடீரென ஆய்வு  மேற்கொண்டனர். புதிய பஸ் நிலையத்தில் இருந்து வெளியே வரும் பஸ்கள்  தனித்தனியாக பிரிந்து செல்லும் வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை சந்திப்பு,  நெல்லித்தோப்பு சிக்னல், புவன்கரே சந்திப்பு, இந்திராகாந்தி சதுக்கம் அதைத்  தொடர்ந்து அரசு மகப்பேறு மருத்துவமனை சந்திப்பு, ராஜீவ்காந்தி சிக்னல்  ஆகியவற்றில் சிறிதுநேரம் நின்று பஸ் வழித்தடங்களை மேம்படுத்துவது தொடர்பாக  அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து மரப்பாலம்,  முருங்கப்பாக்கம் வரையிலான பகுதியிலும், காமராஜர் சாலையிலும் அவர்கள் ஆய்வு  மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

Advertising
Advertising

  பஸ் வழித்தடங்களை மாற்றியமைத்து வேறு  பாதைகளில் திருப்பி விடுவதன் மூலம்  நகர பகுதியில் நெரிசலை குறைக்க  முடியுமா அல்லது பஸ்களுக்கு மட்டும் ஒற்றை வழிப்பாதை முறையை பயன்படுத்தலாமா  என்பது தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது. இந்த  ஆய்வின்போது பொதுப்பணித்துறை, போக்குவரத்து துறை, டிராபிக் மற்றும் சட்டம்-  ஒழுங்கு காவல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: