தாராசுரம் மார்க்கெட் எதிரில் குளம்போல் தேங்கி நிற்கும் கழிவுநீர் தொற்றுநோய் பரவும் அபாயம்

கும்பகோணம், ஆக. 20: கும்பகோணம் அடுத்த தாராசுரத்தில் மொத்தம் மற்றும் சில்லரை காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் தமிழகம் முழுவதில் இருந்தும் காய்கறிகள் லாரிகள் மூலம் வருகிறது.இதேபோல் அனைத்து பகுதிகளுக்கும் லாரி மூலம் காய்கறிகள் ஏற்றி செல்லப்படுகிறது. இதனால் இரவு முதல் காலை வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள், சில்லரை விற்பனையாளர்கள், காய்கறி வாங்குபவர்கள் குவிந்து விடுவர். கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

Advertising
Advertising

தாராசுரம் காய்கறி மார்க்கெட் எதிரில் காய்கறி இறக்குவதற்காக லாரிகள் நிறுத்தும் இடத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் மழைநீருடன் கழிவுநீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் துர்நாற்றம் வீசி கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகி விட்டதால் காய்கறி வாங்குபவர்கள், விற்பனை செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் அவதிப்பட்டு வருகின்றனர். நகராட்சியின் அலட்சியத்தால் காய்கறி மார்க்கெட் எதிரில் இதுபோல் கொசுக்கள் உற்பத்தியாகும் கூடாரமாகியுள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தாராசுரம் காய்கறி மார்க்கெட் எதிரில் பல வாரங்களாக தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: