அவலாஞ்சி - ஊட்டி இடையே போக்குவரத்து துவக்கம்

மஞ்சூர், ஆக. 20: அவலாஞ்சி பகுதியில் தற்காலிகமாக சாலை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து ஊட்டிக்கு அரசு பஸ் போக்குவரத்து துவங்கியது. குந்தா பகுதியில் கடந்த 4ம் தேதி முதல் மழை துவங்கியது. குறிப்பாக கடந்த 8, 9ம் தேதிகளில் சூறாவளி காற்றுடன் வரலாறு காணாத வகையில் கனமழை பெய்தது. இதில் அவலாஞ்சி பகுதியில் நூற்றுக்கணக்கில் மரங்கள் விழுந்து, சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் போக்குவரத்து அத்தியாவசியம் கருதி நெடுஞ்சாலைதுறை சார்பில் துண்டிக்கப்பட்ட சாலைகளை தற்காலிகமாக சீரமைக்கும் பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக அவலாஞ்சி பகுதியில் சாலையில் விழுந்து கிடந்த 100க்கும் மேற்பட்ட மரங்கள் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. மேலும் மழை வெள்ளத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்ட பகுதியில் மணல் மூட்டைகள் அடுக்கப்பட்டு தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் அவலாஞ்சி - ஊட்டி இடையே அரசு பஸ் இயக்கப்பட்டு போக்குவரத்து துவங்கியது. வாகன போக்குவரத்து துவங்கியதால் பொதுமக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: