விபத்தில் பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனை மருத்துவ உதவி கேட்டு மனு

ஈரோடு, ஆக. 20: விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு சென்ற கபடி வீராங்கனை மருத்துவ உதவி கேட்டு கலெக்டர் கதிரவனிடம் நேற்று மனு அளித்தார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே டி.என்.பாளையம் காட்டூர் வீதியைச் சேர்ந்தவர் செல்வன். இவரது மனைவி அன்னக்கொடி. இவர்களுக்கு சந்தியா (21) என்ற மகளும், நரேந்திரன் (18) என்ற மகனும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் கூலி வேலை செய்து கொண்டு வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர். சந்தியா சிறந்த கபடி வீராங்கனை. மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு அந்தியூரில் கோயில் திருவிழாவிற்கு சென்றபோது  விபத்தில் சந்தியாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டதால் தற்போது நினைவு திரும்பி உள்ளது.
Advertising
Advertising

ஆனால் நடக்க முடியவில்லை.சந்தியாவுக்கு தொடர் சிகிச்சை அளித்தால் நடக்கவும், நினைவு முழுமையாக திரும்பவும் வாய்ப்புள்ளதாக டாக்டர்கள் கூறி உள்ளனர். ஆனால், இவர்களின் குடும்பம் ஏழ்மையான நிலையில் உள்ளதால் தொடர்ந்து சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.

சந்தியாவின் தம்பி நரேந்திரனும் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மாதம் 6 ஆயிரம் ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு சென்று வருகிறார். இந்நிலையில், சந்தியாவின் மருத்துவ சிகிச்சைக்கு உதவி கேட்டு நேற்று கலெக்டரிடம் மனு அளிக்க வந்தார். கூட்டம் முடிந்து கலெக்டர் கதிரவன் வெளியே வந்தபோது தங்களின் நிலை குறித்து சந்தியாவும், அவரது தாயாரும் எடுத்துரைத்தனர். இதை கேட்ட கலெக்டர், மருத்துவ சிகிச்சை மற்றும் மருத்துவ உதவிக்கான பணத்திற்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.  சென்னையில் உயர் சிகிச்சை பெறுவதாக இருந்தாலும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து தருவதாக உறுதி அளித்தார். இதைத்தொடர்ந்து, தனது குடும்பத்துடன் கலந்து பேசி முடிவு செய்வதாக சந்தியா கலெக்டரிடம் தெரிவித்தார்.

Related Stories: