அரியாங்குப்பம் காவல் நிலையம் முற்றுகையிட முயற்சி போலீசார் தடுத்து நிறுத்தினர்

புதுச்சேரி, ஆக. 20: அரியாங்குப்பம் காவல் நிலையத்தை பேரணியாக முற்றுகையிட சென்ற சமூக அமைப்பினரை போலீசார் வழியில் தடுத்து நிறுத்தியதால் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உள்பட 115 பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் 10 நாட்களுக்கு முன்பு குடிபோதையில் ஆட்டம் போட்ட வடமாநில இளைஞர்களை தட்டிக் கேட்ட அப்பகுதியை சேர்ந்த பட்டதாரி இளைஞர் தினேஷை போலீசார் தாக்கியதாகவும், அங்கு வந்த காவல்துறை வட மாநிலத்தவருக்கு ஆதரவாக செயல்பட்டதாகவும் திராவிடர் விடுதலைக் கழகம், வி.சிறுத்தைகள், மக்கள் உரிமை கூட்டமைப்பு உள்ளிட்ட சமூக அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. இதை கண்டித்து அரியாங்குப்பம் காவல் நிலையத்தை முற்றுகையிடப் போவதாக திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட சமூக அமைப்புகள் ஒருங்கிணைத்து அறிவித்திருந்தது.

Advertising
Advertising

 அதன்படி நேற்று அங்குள்ள கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் முன் தி.வி. கழகம் லோகு.அய்யப்பன் தலைமையில் விடுதலை சிறுத்தை தேவ.பொழிலன், அமுதவன், மீனவர் விடுதலை வேங்கை மங்கையர்செல்வன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், தமிழக வாழ்வுரிமை கட்சி ஸ்ரீதர், நாம் தமிழர் கட்சி இளங்கோ, தமிழர் களம் பிரகாஷ், தந்தை பெரியார் திக வீர.மோகன், இளங்கோ உள்ளிட்டோர் திரண்டனர். பின்னர் அங்கிருந்து கடலூர் சாலையில், பேரணியாக புறப்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிடச் சென்றனர். காவல் நிலையம் முன் போலீசார் பேரிகார்டுகளை போட்டு 150க்கும் மேற்பட்டோரை தடுத்து நிறுத்தினர். தடையை மீறி செல்ல முயன்ற நிலையில் அவர்களை போலீசார் வலுக்கட்டாயமாக தடுத்ததால் இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அனைவரும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது போலீசுக்கு எதிராக கோஷமிட்டனர். போராட்டத்தால், அரைமணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

 இதையடுத்து அங்கு விரைந்து வந்த தாசில்தார் ராஜேஷ் கண்ணா போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உள்ளூர் இளைஞர்கள் மீது காவல்துறை போட்டுள்ள பொய் வழக்கு தொடர்பாக போராட்டக் குழுவினர் சரமாரி புகார் தெரிவித்தனர். அவர்களை தாசில்தார் சமாதானப்படுத்த முயன்றும் பலனிக்கவில்லை.  மறியலை தொடரவே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அரியாங்குப்பம் இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையிலான போலீசார் மறியல் செய்த 10 பெண்கள் உள்பட 115 பேரை கைது செய்து தவளகுப்பம் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். மறியல் காரணமாக அரியாங்குப்பத்தில் பரபரப்பு நிலவியது. அவ்வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் சிறிதுநேரம் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. அசம்பாவிதத்தை தடுக்க முன்னெச்சரிக்கையாக 50க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.

Related Stories: