மாற்றுத்திறனாளி மாணவர்கள் தவிப்பு

புதுச்சேரி, ஆக. 20:  புதுச்சேரியில் அரசு மற்றும்  நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றி வந்த சிறப்பு ஆசிரியர்களை கல்வித்துறை  திடீரென இடமாற்றம் செய்ததால், மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.புதுச்சேரியில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். சமூக நலத்துறை மூலமாக பல்வேறு திட்டங்கள்  செயல்படுத்தப்பட்டு வருகிறது.  இதன் ஒரு பகுதியாக, கண் பார்வையற்ற, காது கேளாத மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி கற்பதற்கு,  பிள்ளைச்சாவடியில் ஆனந்தரங்கப்பிள்ளை சிறப்பு பள்ளி இயங்கி வருகிறது. இதுதவிர, கல்வித்துறையில் குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் மாற்றுத்திறனாளிகள் கல்வி பயில சிறப்பு ஆசிரியர்கள் பணியிடங்கள் இருக்கிறது. ஆனால் மாற்று நடவடிக்கை எடுக்காமல்,  ஒரு பள்ளியில் பயிலும் சிறப்பாசிரியர்களை  கல்வித்துறை திடீரென இடமாற்றம் செய்வதால் மாற்றுத்திறனாளி குழந்தைகள் கல்வி பாதிக்கப்படுகிறது. சிறப்பாசிரியர்களுக்கான இடமாற்றம் கொள்கையில்,  ஒரு வரையறை  கடைபிடிக்கப்படாததால், தான்தோன்றித்தனமான இடமாற்றம் நடக்கிறது.   நடுநிலைப்பள்ளியில் பணியாற்றி வந்த சிறப்பாசிரியரை உயர்நிலைப்பள்ளிக்கும், இருபாலர் பள்ளியில் பணியாற்றியவரை ஆண்கள் அல்லது பெண்கள் பள்ளிக்கும் இடமாற்றம் செய்கின்றனர்.  சம்பந்தப்பட்ட பள்ளிக்கு வேறொரு சிறப்பாசிரியர்களை   நியமிப்பதில்லை. அங்கு ஏற்கனவே கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவரின் நிலை குறித்து  பெற்றோர் கல்வித்துறை அதிகாரிகளை அணுகும் போது சரியான பதிலை தெரிவிப்பதில்லை.  மிகவும்  அலட்சியமாக இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளியில் கொண்டுபோய் சேர்த்து விடுங்கள் என   பதிலளிக்கின்றனர்.

  பெண்கள் பள்ளியில் சிறப்பாரியராக பணியாற்றிவரை, திடீரென  ஆண்கள் மட்டுமே படிக்கும் பள்ளிக்கு இடமாற்றம் செய்யும் பொது, சம்பந்தப்பட்ட மாற்றுத்திறனாளி மாணவியையும், ஆண்கள் பள்ளியில் சேர்த்துக்கொள்ள முடியுமா?  அதேபோன்று  மாணவிகள் மட்டுமே பயிலும் பள்ளியில்,  ஒரு ஆண் மாற்றுத்திறனாளி மாணவரை  கொண்டுபோய் சேர்க்க முடியுமா? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை. அதோடு   புதுச்சேரி  பகுதி சிறப்பாசிரியரை கிராமப்புற பகுதிக்கு மாற்றினால், அவரோடு, சேர்ந்து புதுச்சேரி நகரப்பகுதியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியையும்  அந்த பள்ளிக்கு மாற்றிவிட முடியுமா? என்பதற்கு பதில் என்ன? என  கேட்கின்றனர்.  இதுபோன்ற பல்வேறு நடைமுறை பிரச்னைகளை ஆராயாமல் சிறப்பாசிரியர் இடமாற்றம் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இப்பிரச்னையில் அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: