‘பிடிடிசி சேர்மன் சவாலை ஏற்று பொது மேடையில் விவாதிக்க தயார்’

புதுச்சேரி, ஜூலை 23:  புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகத்தை (பிடிடிசி) சிறுக சிறுக தனியார் கைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சுண்ணாம்பாறு படகு குழாமில் தற்காலிக அடிப்படையில் கொல்லைப்புறமாக ஆட்கள் நியமிக்கப்படுவதாகவும், படகு குழாமின் வருமானத்தை திருப்பி விட்டு, பினாமி தனியார் படகு குழாமிற்கு முறைகேடாக அரசு அனுமதி அளித்துள்ளதாக பல்வேறு குற்றச்சாட்டுகளை புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத்தலைவர் பாலமோகனன் குற்றம் சாட்டியிருந்தார். பிடிடிசியில் எந்த முறைகேடும் நடக்கவில்லை. இது பற்றி பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் முன்னிலையில் பாலமோகனன் என்னுடன் விவாதிக்கத் தயாரா? என்று பிடிடிசி சேர்மன் எம்என்ஆர்.பாலன் எம்எல்ஏ சவால் விடுத்தார்.  இந்த சவாலை ஏற்கும் வகையில், சேர்மன் எம்என்ஆர் பாலனுக்கு, பாலமோகனன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: நாங்கள் கொடுத்த அறிக்கை மொத்தம் 6 பக்கம். அதனை முழுவதும் படித்து விட்டு, அதிலுள்ள குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுப்பதற்கு தயாராக இருந்தால் பொது மேடையில் விவாதிக்க தயாராக உள்ளேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். மேலும், இந்த கடிதத்தின் நகலை கவர்னர், முதல்வர், சுற்றுலாத்துறை அமைச்சர், தலைமை செயலர், சுற்றுலாத்துறை செயலர், சுற்றுலாத்துறை இயக்குநர் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.

Related Stories: