பாப்ஸ்கோ ஊழியர்கள் ஸ்டிரைக் ரேசன் அரிசி லாரிகள் காத்திருப்பு

புதுச்சேரி, ஜூலை 16:    புதுவையில் காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதியில் ஒன்றான ரேசன் அரிசி  வழங்க கவர்னர் பல்வேறு முட்டுக்கட்டை போட்டும் அதை செயல்படுத்துவதில்  உறுதியாக உள்ளார். மக்களவை தேர்தலுக்கு பிறகு 2 மாதமாக ரேசன் அரிசி  வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது சிவப்பு அட்டைதாரர்களுக்கு 20 கிலோ  அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகம், ஆந்திரா  உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து அரிசி கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வப்போது லாரிகளில் ரேசன் அரிசி புதுச்சேரிக்கு வருகின்றன. இவ்வாறு வரும் ரேசன்  அரிசி லோடுகள் அனைத்தும் தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே  கொண்டு வரப்பட்டு அதிகாரிகளின் தரஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதில் ஏதேனும்  குறைபாடுகள் இருப்பின் அந்த லாரி திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் புதுவைக்கு 5, 6 லாரிகளில் டன் கணக்கில் நேற்று ரேசன் அரிசி  வெளிமாநிலத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. அவற்றை தர ஆய்வு செய்யும்  பணியை மேற்கொள்ளும் பாப்ஸ்கோ ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால்  அவர்கள் இப்பணியை மேற்கொள்ளவில்லை. இதன் காரணமாக நீண்டநேரமாக அந்த  லாரிகள் லோடுகளை இறக்க முடியாமல் அங்கேயே பரிதவித்தன. இதுபற்றிய தகவல் துறை  அமைச்சரான கந்தசாமி மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அமைச்சர் தரப்பில் அவசர  பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு  ஏற்படும் பட்சத்தில் லாரிகளில் கொண்டு வரப்பட்ட ரேசன் அரிசிகள் தரஆய்வு  முடிக்கப்பட்டு ரேசன் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிகிறது.

Advertising
Advertising

Related Stories: