பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை எடுக்க பொது ஏலம்

காரைக்கால், ஜூலை 15:  காரைக்கால் திருநள்ளாற்றில் உள்ள தர்பாரண்யேஸ்வரர் கோயிலில், சனிபகவன் தனிசன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் இக்கோயிலில் சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு சனிபகவானை தரிசனம் செய்யவரும் பக்தர்களில் பெரும்பாலானோர், அருகில் உள்ள நளன்குளத்தில் புனித நீராடி, தங்கள் ஆடைகளை குளத்தில் விட்டுச்செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா, சமீபத்தில் நளன் குளத்தை ஆய்வு செய்தபோது, பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளால் அடுத்தடுத்து வரும் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுவதை பார்த்து, இனிவரும் காலங்களில் குளத்தின் படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ள ஆடைகள் சேமிப்புத்தொட்டியில் பக்தர்கள் தங்கள் ஆடைகளை விட்டுசெல்லுமாறு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து, அதை உத்தரவாகவும் அறிவித்தார்.

கலெக்டரின் வேண்டுகோளை ஏற்று கடந்த சில வாரமாக பக்தர்கள் குளத்தின் படிக்கட்டுகளில் வைக்கப்பட்டுள்ள ஆடை சேகரிப்பு தொட்டியில், குளித்து முடித்த ஆடைகளை போட்டு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் நளன் குளத்தில் படிக்கட்டுகளில் பக்தர்கள் விட்டுச்செல்லும் ஆடைகளை சேகரிக்க நேற்று பொது ஏலம் விடப்பட்டது. அதாவது ஜூலை 15 முதல் வரும் அக்டோபர் 31ம் தேதி வரை மூன்றரை மாதத்திற்கு ஆடைகளை சேகரித்து எடுத்துசெல்ல, ரூ.13 லட்சத்திற்கு தனி நபர் ஒருவர் ஏலம் எடுத்தார். இதுகுறித்து கோயில் நிர்வாக அதிகாரி சுந்தர் கூறுகையில், மாவட்ட கலெக்டரின் ஆலோசனையின் பேரில், பக்தர்கள் ஆடைகளை குளத்தில் வீசாமல், குளத்தின்  படிகட்டுகளில் உள்ள ஆடை சேகரிப்பு தொட்டியில் போட்டு நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகின்றனர். இனி வரும் பக்தர்களும் இதுபோல் கோயில் நிர்வாகத்திற்கும், பிற பக்தர்களின் நலன்கருதியும், ஆடைகளை ஆடை சேகரிப்பு தொட்டியில் போடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆடை சேகரிக்க ஏலம் எடுத்த நபர், தினந்தோறும் உடனுக்குடன் ஆடைகளை எடுத்து பக்தர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: