சுதேசி, பாரதி, ஏஎப்டி அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று தர்ணா

புதுச்சேரி, ஜூலை 12: சுதேசி, பாரதி, ஏஎப்டி மில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களில் பணிபுரியும் 15 ஆயிரம் தொழிலாளர்களுக்கு பசி பட்டினி, சம்பளம் இல்லை. வேலைக்கு உத்திரவாதம் இல்லை, கிராஜூட்டி இல்லை, இதனால் பட்டினி சாவு, தற்கொலை, மன உளைச்சல் மரணம். இதற்கு தீர்வு காண புதுச்சேரி அரசு முன்வரவில்லை. புதுச்சேரி மண்ணில் சம்பளம் இன்றி அன்றாடம் தொழிலாளர்கள் செத்து மடிவது தெரிந்தும் தற்போது சுதேசி, பாரதி, ஏஎப்டி மில்களை புனரமைக்க போகிறோம். இதற்கான நிதியை மத்திய அரசிடம் கேட்க போகிறோம். 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்பை உருவாக்க போகிறோம் என்று திட்டம் தீட்டுகிறார்கள், தீர்மானம் போடுகிறார்கள். இறுதியில் மத்திய அரசு பணம் கொடுக்கவில்லை என்று மத்திய அரசு மீது பழிபோட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதற்கா? என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடைசியில் 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கும் வேலை கிடைக்காது. இருக்கும் தொழிலாளர்களும் சம்பளம் இன்றி செத்து மடிந்து விடுவார்கள், பிரச்னையும் முடிந்து விடும். இது தான் திட்டத்தின் உள்நோக்கமா என்பதும் தெரியவில்லை. நிரந்தர தொழிலாளர்களின் பிரச்னைக்கு ஒரு நல்ல சுமூக முடிவை ஏற்படுத்தி விட்டு, பிறகு உங்களது புதிய திட்டத்தை செயலாற்றுங்கள் என அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அரசை கேட்டுக் கொள்கிறோம். சுதேசி, பாரதி, ஏஎப்டி மில் தொழிலாளர்களின் அவல நிலையை புதுச்சேரி அரசுக்கு உணர்த்தியும், இதன்பேரில் ஒரு நல்ல தீர்வு காண வலியுறுத்தியும் சுதேசி மில் அருகே இன்று (12ம் தேதி) காலை 9 மணிக்கு தர்ணா போராட்டம் நடத்தப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் எல்பிஎப், ஏஐடியுசி, சிஐடியு, ஏடியு, என்ஆர்டியுசி, எஸ்பிபிடிஎஸ், பிஎம்பிடிஎஸ், பிஎல்யு உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பங்கேற்கின்றன.

Advertising
Advertising

Related Stories: