தென்மேற்கு பருவமழை பொய்த்து வரும் நிலையில் நெல்லையில் வெயில் தாக்கம் மீண்டும் உயரும்

நெல்லை, ஜூலை, 11: தென்மேற்கு பருவமழை பொய்த்துவரும் நிலையில் வெயில் தாக்கம் மீண்டும் உயரும் என வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் குடிநீர் தட்டுப்பாடு தொடரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.வழக்கமாக ஜூன், ஜூலை மாதங்களில் வெயில் குறைந்து தென்மேற்குபருவமழை பரவலாக பெய்யும். தென்றல் காற்றும் வீசும். ஆனால் இந்த ஆண்டு ஜூன் 10ம் தேதிக்கு பின்னர் கேரளாவில் தொடங்கிய பருவமழை சில நாட்கள்கூட நீடிக்கவில்லை. இதன் காரணமாக தமிழகத்திலும் இன்றுவரை தென்மேற்கு பருவமழை இயல்பான அளவைவிட மிககுறைவாகவே பெய்துள்ளது. மழை பொய்த்துள்ளதால் கார்பருவ சாகுபடி நடைபெறவில்லை. இதனால் வயல்களும் பாலைவனம் போல் காட்சியளிக்கின்றன. நெல்லை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 107 டிகிரிவரை வெப்பம் பதிவான நிலையில் கடந்த ஒரு மாதமாக 100 டிகிரிக்குள் பதிவாகிறது. ஆயினும் அவ்வப்போது வெப்ப தாக்கம் அதிகரிக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும் 3 நாட்கள் 100 டிகிரியை வெப்பம் எட்டியது. காற்று பலமாக வீசினாலும் வெப்ப பதிவு நீடிப்பதால் அனல் காற்றாகவே உணரப்படுகிறது. இந்த நிலையில் அடுத்து வரும் நாட்களில் வெயில் அளவு மீண்டும் உயர வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை தகவல்கள் ெதரிவிக்கின்றன. குறிப்பாக நாளை வெள்ளிக்கிழமை நெல்லையில் 102.4 டிகிரிவரை வெப்பம் உயர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமையும் 101 டிகிரியாக வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது. மீண்டும் கோடை தலைதூக்கியுள்ளதால் குடிநீர் தட்டுப்பாடு மேலும் நீடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories: