பாரதியார் அருங்காட்சியக முன்பக்க சுவர் சேதம்

புதுச்சேரி, ஜூன் 27:  புதுச்சேரியில் உள்ள பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தின் முன்பக்க சுவர் சேதமடைந்துள்ளது. இதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்திய விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேயரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, பிரான்ஸ் வசமிருந்து புதுவைக்கு பாரதியார் வந்தார். அவர் 1908ல் இருந்து 1910 வரை புதுவையில் தான் வசித்தார். இங்கிருந்தபடியே, தமிழ் பணி, இதழியல் பணி, சமூக பணி ஆகியவற்றை தொடர்ந்து மேற்கொண்டார். அவரது வாழ்ந்த இல்லம் புதுச்சேரி ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இந்த இல்லம், கலை பண்பாட்டு துறை சார்பில் பாரதியார் நினைவு அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு பாரதியார் பயன்படுத்திய பொருட்கள், அரிய புகைப்படங்கள், அவர் கைப்பட எழுதிய கடிதங்கள், கவிதைகள், பாரதியார் நடத்திய இதழ்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது உலகெங்கிலிருந்தும் வரும் தமிழர்கள், சுற்றுலா பயணிகள், தமிழக, புதுச்சேரி மக்கள் அறிந்து பயனடையும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

 கடந்த 2009ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த இல்லம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டது. நிதி பற்றாக்குறை காரணமாக 5 ஆண்டுகளுக்கு மேல் புனரமைப்பு பணிகள் முற்று பெறாமல் இழுத்து கொண்டிருந்தது. இதையடுத்து, கலை பண்பாட்டுத்துறை ரூ.1 கோடி ஒதுக்கியதன் பேரில், பாரதியார் இல்லத்தை பழமை மாறாமல் இன்டாக் அமைப்பு புதுப்பித்தது. 2016ம் ஆண்டு பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. இந்த இல்லத்தை தமிழறிஞர்கள், மாணவர்கள், சுற்றுலா பயணிகள் என பலரும் பார்வையிட்டு வருகின்றனர். புதுப்பிக்கப்பட்ட 2 ஆண்டுகளிலேயே இந்த இல்லத்தின் முன்பக்க சுவர் கடுமையாக சேதமடைந்த காணப்படுகிறது. சுவரின் மீது செடி, கொடிகள் வளர்ந்து  விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் முன்பக்க சுவர் இடிந்து விழும் நிலை உள்ளது. இல்லத்தை சுற்றி போடப்பட்டுள்ள தரை சேதமடைந்து அலங்கோலமாக காட்சியளிக்கிறது. மேலும், ஒரு துணில் இருந்த சுண்ணாம்புகள் சிறிது சிறிதாக பெயர்ந்து விழுகின்றது. இதே நிலை தொடர்ந்து பாரதியார் வாழ்ந்த வீடு விரைவில் பொலிவிக்கும் சூழல் ஏற்படும்.

எனவே, புதுவை அரசு கலை, பண்பாட்டுத்துறை காலம் தாழ்த்தாமல் பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் சேதமடைந்த முன்பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: