ஜிப்மரில் தடுப்பூசி தொடர் மருத்துவ கல்வி கருத்தரங்கம்

புதுச்சேரி, ஜூன் 27: புதுச்சேரி ஜிப்மரில் நோய்களை தடுக்கும் தடுப்பூசி குறித்த தொடர் மருத்துவக்கல்வி கருத்தரங்கம் நடைபெற்றது. ஜிப்மருடன் இணைந்து உலக சுகாதார அமைப்பு அலுவலகமும், இந்திய பொதுசுகாதார சங்கமும் இணைந்து இதனை நடத்தின. தடுப்பூச்சி மற்றும் தடுக்கக்கூடிய தொற்று நோய்களில் பாதுகாப்பு மற்றும் வலுவான கண்காணிப்பு, முறையான தடுப்பூசி கண்காணிப்பு முறை மூலம் மிக உயர்ந்த அளவிலான நோய் கட்டுப்பாட்டை அடைவதற்கான திறன் மேம்பாட்டு முறைகள் இதில் வலியுறுத்தப்பட்டது. ஜிப்மர் இயக்குனர் டாக்டர் ராகேஷ் அகர்வால் துவக்கி வைத்தார். முதுகலை பேராசிரியர் கவுதம் ராய், நோய் தடுப்பு மற்றும் சமூக துறை தலைவர் சோனாலி சர்கார் ஆகியோர் வரவேற்றனர். உலக சுகாதாரத்துறை மருத்துவ அதிகாரி சாயிரா பானு, சமூக மருத்துவத்துறை வல்லுனர்கள், ஜிப்மர் பொது சுகாதார துறையில் உள்ள 200க்கும் மேற்பட்டோர், முதுகலை பட்ட மேற்படிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எம்பிஎச் மாணவர்கள், குழந்தை நல மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி, தடுக்கக்கூடிய நோய்களை கண்காணித்தல், தடுப்பு முறை குறித்து கலந்துரையாடினர். தொடர் நிகழ்வாக, டாக்டர் சாயிரா பானு தேசிய அளவில் உள்ள தட்டம்மை, ருபெல்லா போன்றவைகளின் தகவல்கள், கண்காணிப்பு நிலைகளை எடுத்துரைத்தார். ஜிப்மர் முதுகலை மாணவர்கள் அறிவியல் சார்ந்த ஆவணங்களின் அடிப்படையில் டிப்தீரியா, தட்டம்மை, ருபெல்லா, டெட்டானஸ் போன்ற முக்கிய நோய்களை பற்றி விளக்கினர். டாக்டர் சோனாலி சர்கா, தற்போதுள்ள காசநோய்க்கான தடுப்பூச்சி பற்றி உரையாற்றினார். டாக்டர் வெங்கடாஜலம் நன்றி கூறினார்.

Related Stories: