நூறு நாள் வேலை திட்டத்தில் நிலுவை சம்பளம் வழங்க கோரி பல்லடத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

பொங்கலூர், ஜூன் 26:பல்லடம் ஊராட்சி ஒன்றியப் பகுதிகளான அனுப்பட்டி, வேலம்பாளையம், பனிக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு ஊராட்சிப்பகுதிகளில் நூறுநாள் வேலைத்திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின்  திருப்பூர் மாவட்ட நிர்வாகி பஞ்சலிங்கம், சி.பி.எம். நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பரமசிவம் ஆகியோர் தலைமையில் பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று திடீர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால் துணை வட்டார அலுவலர் ஆறுமுகத்திடம்  நூறுநாள் வேலைத்திட்டப்பணிகளை உடனடியாகத் துவங்கவும், நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், அரசு அறிவித்த 229 ரூபாய் கூலியை குறைக்காமல் வழங்க கோரியும் நூறுநாள் வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு 400ரூபாய் கூலியை உயர்த்தி வழங்க கோரியும் மனுக்கொடுத்தனர். மனுக்களைப் பெற்றுக் கொண்ட துணை  வட்டார வளர்ச்சி அலுவலர்  ஆறுமுகம், பெறப்பட்ட மனுக்களை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என உறுதியளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.  இது குறித்து விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி சம்பத் கூறுகையில், ‘‘உடனடியாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இல்லாவிட்டால் அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களை முற்றுகையிட்டுத் தொடர்  போராட்டங்களில் ஈடுபடுவோம்,’’ என்றார்.

Related Stories: