மினி வேன் கவிழ்ந்து விபத்து சாலையில் சிதறிய மத்தி மீன்கள்

புதுச்சேரி, ஜூன் 26:  புதுச்சேரி அரியாங்குப்பத்தில் நள்ளிரவில் மினிவேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் சிதறிய மத்தி மீன்களை பொதுமக்கள் அள்ளிச் சென்றனர். தமிழகம், புதுவையில் 61 நாள் மீன்பிடி தடை காலம் முடிந்து கடந்த 10 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு சென்று வருகின்றனர். தற்போது மீனவர்களின் வலைகளில் அதிகளவில் மத்தி மீன்கள் பிடிபடுகின்றன. இதனிடையே நாகை மாவட்டம் பூம்புகாரில் இருந்து நேற்று முன்தினம் இரவு   ஒரு மினிலோடு வாகனம் மத்தி மீன்களை ஏற்றிக் கொண்டு புதுச்சேரி நோக்கி வந்து கொண்டிருந்தது. அரியாங்குப்பம் காவல் நிலையம் அருகே கடந்து வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவே தடுப்புக் கட்டை பகுதியில் இருந்த மின் கம்பத்தின்மீது மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் வண்டியை ஓட்டிய டிரைவரும், அவருடன் வந்த மற்றொரு நபரும் காயமடைந்தனர். மேலும் மினிவேனில் இருந்த மீன்கள் அனைத்தும் சாலையில் சிதறின. இதுபற்றி தகவல் கிடைத்ததும் ரூரல் போக்குவரத்து போலீசாரும், அரியாங்குப்பம் காவல்துறையினரும் அங்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 இதற்கிடையே, சாலையில் மீன்கள் சிதறிக் கிடக்கும் தகவலை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் சென்ற பயணிகள் அவற்றை போட்டி போட்டு அள்ளிச் சென்றனர். இதனால் ஒரு மணி நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இந்த விபத்து குறித்து வழக்குபதிந்த போக்குவரத்து போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் மினிவேனை ஓட்டிவந்தவர் தரங்கம்பாடியைச் சேர்ந்த மகேந்திரன் (35) என்பதும், டிரைவர் கண் அயர்ந்ததால் விபத்து நடந்ததும் தெரிய வந்துள்ளது.

Related Stories: