விஜயநகரம் பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க கோரிக்கை

ஊட்டி, ஜூன் 25:  ஊட்டி ரோஜா பூங்கா அருகேயுள்ள விஜயநகரம் பகுதிக்கு செல்லும் சாலையில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளம் முறையாக மூடப்படாததால் சாலை பழுதடைந்து பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட ரோஜா பூங்கா அருேகயுள்ள விஜயநகரம் பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த ஓராண்டிற்கு முன் அப்பகுதியில் பாதாள சாக்கடை அமைக்கப்பட்டது. இதற்காக, சாலையின் நடுவே பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டன. கால்வாய் அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், அதை முறையாக நகராட்சி நிர்வாகம் மூடவில்லை. மேலும், பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், சாலையை சீரமைக்கும் நடவடிக்கையில் நகராட்சி நிர்வாகம் ஈடுபடவில்லை.   இதனால், சாலையின் நடுவே பெரிய அளவிலான பள்ளங்களும், சில இடங்களில் மேடும் ஏற்பட்டுள்ளது. இதில், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. இதை சீரமைக்க கோரி அப்பகுதி மக்கள் கடந்த பல மாதங்களாக நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தும், அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதனால், அந்த சாலையில் தினமும் விபத்து ஏற்படுகிறது. எனவே, விஜயநகரம் பகுதிக்கு செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: