கலசபாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் எம்எல்ஏ சமரசம்

கலசபாக்கம், ஜூன் 25: கலசபாக்கம் அருகே சீரான குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் எம்எல்ஏ சமரச பேச்சுவார்த்தை நடத்தினார் கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் ஊராட்சி மதுரா மேல்சிறுவள்ளூரில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதி பொதுமக்களின் வசதிக்காக சமீபத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால், அதற்கான மின்மோட்டார் உடனடியாக பொருத்தப்படாமல் இருந்ததால், பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் இருந்து வந்தது. இந்நிலையில் அப்பகுதியில் குடிநீர் பிரச்னை ஏற்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி நேற்று மேல்சிறுவள்ளூர் செல்லும் கூட் ரோட்டில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த எம்எல்ஏ பன்னீர்செல்வம் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பின்னர், பிடிஓ அன்பழகனிடம் போனில் தொடர்பு கொண்டு ஒரு மணி நேரத்துக்குள் புதிய மின்மோட்டார் பொருத்த வேண்டும் என்று உத்தரவிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக புதிய மின்மோட்டாரை வாங்கி வந்து பொருத்தும் பணியில் ஈடுபட்டனர். இதனையேற்ற, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: