வேலிவியூ, தலையாட்டுமந்து பகுதிகளுக்கு பார்சன்ஸ்வேலி தண்ணீர் வழங்க கோரிக்கை

ஊட்டி, ஜூன் 19:  வேலிவியூ, தலையாட்டு மந்து பகுதி மக்களுக்கு பார்சன்ஸ்வேலி தண்ணீர் விநியோகம் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.   ஊட்டி நகராட்சிக்குட்பட்ட தலையாட்டு மந்து, வேலிவியூ, விஜயநகரம், சவுத்வீக் போன்ற பகுதிகளுக்கு தற்போது டைகர் ஹில் அணை தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இம்முறை பருவமழை பொய்த்த நிலையில் டைகர் ஹில் அணையில் தண்ணீர் மிகவும் குறைந்து காணப்படுகிறது. தற்போது ஊட்டி மற்றும் புறநகர் பகுதிகளில் சாரல் மழை பெய்த போதிலும் டைகர்ஹில் அணையில் தண்ணீர் மட்டம் போதுமான அளவு உயரவில்லை. இதனால், இந்த அணை நீர் முழுமையாக அனைத்து வார்டுகளுக்கும் விநியோகம் செய்ய முடியாமல், நகராட்சி நிர்வாகம் திணறி வருகிறது. அதே சமயம், அப்பகுதிகளை சேர்ந்த மக்களும் போதிய தண்ணீர் கிடைக்காமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

 இதில் வசதி படைத்தவர்கள் தனியார் நிறுவனத்திடம் இருந்து விலை கொடுத்து லாரி தண்ணீர் வாங்கி கொள்கின்றனர். ஆனால், பெரும்பாலான பகுதிகளில் ஏழை, எளிய மக்கள் லாரி தண்ணீர் வாங்கி சமாளிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். தற்போது, பார்சன்ஸ்வேலி பகுதியில் மழை பெய்துள்ள நிலையில் அணையில் ஓரளவு தண்ணீர் உள்ளது. எனவே, வேலிவியூ, தலையாட்டு மந்து மற்றும் விஜயநகரம் பகுதிகளில் உள்ள மக்களின் தண்ணீர் பிரச்னையை தீர்க்க பார்சன்ஸ்வேலி அணை தண்ணீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: