துறையூரில் காமராஜர் படிப்பகத்துக்கு சீல் வைப்பு

துறையூர் ஜூன் 12: துறையூர் மார்க்கெட் அருகே பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில்களில் ஒன்றான சந்தி வீரப்பன் கோயில் அருகே காமராஜர் படிப்பகம் பல வருடங்களாக உள்ளது. இந்த நூலகத்தை முதலில் காங்கிரஸ் கட்சியினரும், அதன் பின்னர் அங்கிருந்து தமாகா கட்சிக்கு மாறிய நிர்வாகிகள் பராமரித்து வந்தனர். அதன் பின்னர் நிர்வாகிகள் கட்சி மாறி சென்றதால் படிப்பகம் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆயினும் இங்கு வரும் தினசரி நாளிதழ்களை அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் பயன்படுத்தி வாசித்து வந்தனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணம் செலுத்தாததால் மின்துறை மின் இணைப்பை துண்டித்து சென்றது. அதன் பின் மின் கட்டணம் செலுத்தினர். இந்நிலையில் படிப்பகத்துக்கு முறையாக வாடகை செலுத்தாமல் முறையான அனுமதியின்றி ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக கூறி இந்து சமய அறநிலையத்துறையை சேர்ந்த திருச்சி உதவி ஆணையர் ராணி தலைமையில் துறையூர் செயல் அலுவலர் ஜெயா உள்ளிட்ட கோயில் பணியாளர்கள் காவல்துறை பாதுகாப்புடன் காமராஜர் படிப்பகத்தை காலி செய்து கோயில் நிர்வாகம் எடுத்துக் கொண்ட அறிவிப்பினை படிப்பகத்தின் வெளியே ஒட்டினர். மேலும் படிப்பகத்தின் கிரில் கேட்டை பூட்டி யாரும் திறக்காதபடி சீல் வைத்தனர்.

Related Stories: