பயணிகளை ஸ்டாப்பில் இறக்கி விடாத தனியார் பஸ் சிறைபிடிப்பு

வாழப்பாடி, ஜூன் 11: வாழப்பாடி அருகே பயணிகளை ஸ்டாப்பில் இறக்கி விடாத தனியார் பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலத்தில் இருந்து காரிப்பட்டி செல்வதற்காக, நேற்று மதியம் 2 பயணிகள் தனியார் பஸ்சில் ஏறினர். அப்போது, கண்டக்டர் காரிப்பட்டிக்கு பஸ் செல்லாது, தேசிய நெடுஞ்சாலை வழியாகவே சென்றுவிடும் என கூறி, அவர்களை வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார். இதுகுறித்து, பயணிகள் தங்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, அந்த தனியார் பஸ் சேலத்திலிருந்து ஆத்தூர் நோக்கி செல்லும்போது, காரிப்பட்டி போலீஸ் ஸ்டேசன் எதிரே, பொதுமக்கள் திரண்டு அந்த பஸ்சை சிறைபிடித்து கண்டக்டர், டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த காரிப்பட்டி போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பஸ்சை விடுவித்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘தனியார் பஸ்கள் ஊருக்குள் வராமல் தேசிய நெடுஞ்சாலையில் செல்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுமக்கள், தனியார் பஸ் உரிமையாளர்கள், போக்குவரத்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில், சர்வீஸ் சாலை வழியாக அனைத்து பஸ்களும் இயக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, சில நாட்கள் மட்டுமே சர்வீஸ் சாலை வழியாக பஸ்கள் சென்று வந்தன. இந்நிலையில், ஒரு சில பஸ்கள் அயோத்தியாப்பட்டணம், காரிப்பட்டி, வாழப்பாடி, புத்திரகவுண்டன்பாளையம் பகுதியில் பயணிகளை ஏற்ற மறுத்து, நிறுத்தாமல் சென்று வருகின்றன. இதுகுறித்து போக்குவரத்து ஆய்வாளர் ஆய்வு செய்து, பஸ்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர்.

Related Stories: