சட்டமன்ற வளாகத்தில் வைத்திலிங்கம் எம்பிக்கு அலுவலகம்

புதுச்சேரி, ஜூன் 7: புதுச்சேரி நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம் வெற்றி பெற்று எம்பி ஆனார். அவருக்கான அலுவலகம் சட்டமன்ற வளாகத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதைய முதல்வர் நாராயணசாமி எம்பியாகவும், மத்திய அமைச்சராகவும் இருந்தபோது அவருக்கு அலுவலகம் கம்பன் கலையரங்கில் ஒதுக்கப்பட்டு இருந்தது. என்ஆர் காங்கிரசில் ராதாகிருஷ்ணன் எம்பியாக இருந்தபோது, அவருக்கு தனியாக அலுவலகம் அமைக்கப்படவில்லை.

இந்நிலையில் வைத்திலிங்கத்துக்கு சட்டமன்ற வளாகத்திலேயே அலுவலகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. விக்டர் சிமோனல் வீதியில் சட்டசபை நுழைவு வாயிலுக்கு அருகில் தர்ஷினி பெயரில் ஓட்டல் செயல்பட்டு வந்தது. அது கடந்த 10 ஆண்டுகளாக செயல்படவில்லை. அந்த இடத்தில் பாண்லே பாலகம், ஏடிஎம் மையம் அமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது அந்த இடத்தை எம்பி அலுவலகமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் சபாநாயகரின் தனி உதவியாளர் சம்பத் தலைமையில் அதிகாரிகள் அந்த இடத்தை நேற்று ஆய்வு செய்துள்ளனர்.

Related Stories: