மத்திய அரசு நிறுவனங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன

புதுச்சேரி, ஜூன் 7: மத்திய அரசின் நிறுவனங்கள் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டதாக வைத்திலிங்கம் எம்பி கூறியுள்ளார்.

 புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடந்த வெங்கடசுப்பா ரெட்டியார் நினைவுநாள் நிகழ்ச்சியில் வைத்திலிங்கம் எம்பி பேசியதாவது:

கடந்த 1ம் தேதி காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களும், ராஜ்ய சபா உறுப்பினர்களும் கலந்து கொண்டோம். இதில் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி தலைவராக சோனியாகாந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், ராஜ்ய சபாவில் நமது பலம் குறைவாக இருக்கிறது. எனவே மற்ற கட்சிகளுடன் இணைந்து செயல்பட வேண்டும். அதேபோன்று நாடாளுமன்றத்தில் பாஜகவின் மக்கள் விரோத செயல்பாடுகளை தடுக்கும் வகையில் நமது எம்பிக்களின் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசும்போது, இன்றைய சூழலில் நமது போராட்டம் என்பது மோடியை எதிர்ப்பது மட்டுமே அல்ல, எல்லா துறைகளும் கெட்டுப்போய் விட்டது. நிதி, நீதி, சிபிஐ, ராணுவம், தேர்தல் ஆணையம் என அனைத்து துறைகளும் தன்னுடைய உண்மை நிலையில் இருந்து மாறி செயல்பட துவங்கி இருக்கிறது. இதனை எதிர்க்க வேண்டிய கட்டாயம் நம் அனைவருக்கும் இருக்கிறது. காங்கிரஸ் எம்பிக்கள் இதற்கு எதிராக நாடாளுமன்றத்தில் போராட வேண்டும், என்று கூறினார்.

அரசாங்கம் தவறு செய்தால் நீதிமன்றத்துக்கு போகலாம். நீதிமன்றமே தவறு செய்தால் யாரிடம் போவது. தேர்தல் துறை தன்னுடைய நிலையில் இருந்து மாறிவிட்டது. ராணுவம் உண்மையை உரைக்க மறுக்கிறது. மத்திய அரசின் நிறுவனங்கள் எல்லாம் மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டன. இதனை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: