காவல்துறை சார்பில் கிரிக்கெட் போட்டி 4 வயது சிறுவனுக்கு பந்து வீசிய கமிஷனர்

சேலம், ஜூன் 4: சேலம் காந்தி ஸ்டேடியத்தில் காவல்துறை சார்பில் நடந்த கிரிக்கெட் போட்டியில், 4 வயது சிறுவன் பேட்டிங் செய்ய கமிஷனர் சங்கர் பந்து வீசியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. சேலம் மாநகர காவல் துறை சார்பில், போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையேயான கிரிக்கெட் போட்டி காந்தி ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் ஆட்டையாம்பட்டி அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

அந்த அணிக்கு மாநகர கமிஷனர் சங்கர் கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கினார். கமிஷனர் சங்கரின், கார் டிரைவர் சுரேசுடைய மகன் ஹேமன்(4). இந்த சிறுவன் 2 வயதில் இருந்தே கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறான். நேற்று காந்தி ஸ்டேடியத்திற்கு தந்தையுடன் வந்த சிறுவன் ஹேமன், பேட்டிங் செய்ய விரும்பினான். இதையடுத்து, அவனுக்கு கமிஷனர் சங்கர் பந்து வீசினார். 4 வயது சிறுவனுக்காக, போலீஸ் கமிஷனர் பந்து வீசியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இது குறித்து, ஹேமனுடைய தாய் சிவரஞ்சனி கூறுகையில், ‘ஹேமன் எல்கேஜி படிக்க செல்கிறான்.

எனது கணவர், மாநில அளவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் கோப்பை பெற்றுள்ளார். தனது மகனும் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்பதற்காக, 2 வயது முதல் பயிற்சி அளித்து வருகிறார். ஹேமன் தினசரி 50 நிமிடத்தில், 5 கிலோ மீட்டருக்கு மேல் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டு வருகிறான்.  

கிரிக்கெட்டில், ஒரு மணிநேரத்தில் 500 பந்துகளை எதிர்கொள்கிறான். எதிர்காலத்தில் அவன் சிறந்த கிரிக்கெட் வீரனாக வேண்டும் என்பது எங்களது ஆசையாகும்,’ என்றார்.

Related Stories: