திண்டுக்கல்லை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி ஆர்டிஓ அலுவலகங்களில் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு

திண்டுக்கல், ஜூன் 4: திண்டுக்கல் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரி கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. திண்டுக்கல்லில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்டத்தலைவர் செல்வராஜ் தலைமை வகிக்க, மாவட்ட செயலாளர் பெருமாள், பொருளாளர் தங்கவேல் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாவட்ட விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 140 ஆண்டுகளாக இல்லாத வறட்சி நிலவுவதாக கடந்த ஆண்டே அரசு தரப்பில் ஒப்புக்கொள்ளப்பட்டது. இந்தாண்டு அதை விட மோசமாக உள்ளது. இதனால் விளைநிலங்கள் தரிசு நிலங்களாக மாறி உள்ளது. போதிய மழையும் இல்லாததால் குடிப்பதற்கு கூட கிராம பகுதிகளில் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. கால்நடைகளுக்கும் அதேநிலை தான். இதனால் கால்நடைகளை அடிமாட்டு விலைக்கு சந்தைகளில் விற்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மாவட்டத்தின் வறட்சி நிலையை கருத்தில்கொண்டு வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து போர்க்கால அடிப்படையில் நிவாரண பணிகளை மேற்கொள்ள வேண்டும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும். அரசு நிர்ணயித்த கூலியான ரூ.229க்கு குறைவின்றி வழங்க வேண்டும். ஆனால் பல ஊராட்சிகளில் ரூ.150, ரூ.180 வழங்கப்படுகிறது. 100 நாள் வேலை திட்டம் ஒரு வறுமை ஒழிப்புத் திட்டம்.

இதில் அலட்சியமாக அதிகாரிகள் நடந்து கொள்ளாமல் முழுமையான கூலி ரூ.229ஐ வழங்க அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும். அதேபோல பயிர் இன்சூரன்ஸ் பாக்கிகளை உடனடியாக வழங்கிட வேண்டும். மானிய விலையில் மாட்டுத்தீவனம் வழங்கிட வேண்டும். காய்ந்து போன தென்னை மற்றும்  பழ வகை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். ஏரி, குளங்கள், வரத்து வாய்க்கால்களை தூர்வாரிட வேண்டும்.

மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கிட வேண்டும். 5 நாட்களுக்கு ஒரு முறையாவது குடிநீர் வழங்கிட அரசு முன்வர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஜ!ன் 10ம் தேதியில் திண்டுக்கல், பழநியில் உள்ள பழனி கோட்டாட்சியர் அலுவலகங்களில் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Related Stories: