ஜலகண்டாபுரம் பகுதியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை; வீடுகள், தறிப்பட்டறை சேதம்

ஜலகண்டாபுரம், மே 30:  ஜலகண்டாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 50க்கும் மேற்பட்டவீடுகள் சேதமடைந்தன. இதற்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஜலகண்டாபுரம் மற்றும் சூரப்பள்ளி, ஆவடத்தூர், தோரமங்கலம், கரிக்காப்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமபகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. மாலையில் லேசான மேகமூட்டத்துடன் காணப்பட்ட வானிலையில் மாற்றம் ஏற்பட்டு 6 மணி முதல் மழை பெய்ய துவங்கியது. இரவு 10 மணி வரை சுமார் 4 மணி நேரம் பெய்த லேசான மழையுடன் பலத்த சூறைக்காற்றும் வீசியதால் பலஇடங்களில் வீடுகளின் மேல் வேயப்பட்டிருந்த ஓடுகள் காற்றில் பறந்தன. மேலும், 50க்கும் மேற்பட்ட இடங்களில் சாலையோர மரங்கள் பலத்த காற்றுக்கு தாக்குபிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்தது. இதனால், சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பங்கள் மற்றும் உயரழுத்த மின் கம்பிகளின் மீது விழுந்தன. இதில், 15க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் உடைந்து சேதமடைந்தது. இதனால், ஏற்பட்ட மின் தடையால் கிராமப்புற வீடுகள் இருளில் மூழ்கியது. மேலும், 10க்கும் மேற்பட்ட தறிக்கூடங்களின் மேல் போடப்பட்டிருந்த சிமென்ட் கூரைகள் உடைந்து மழைநீர் உள்ளே புகுந்ததால் பல ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தறி உபகரணங்கள் வீணானது.

இரவு 10 மணிக்கு மேல் மழை சற்று ஓய்ந்த நிலையில் மின் வாரிய ஊழியர்கள் மின் தடை ஏற்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஓரிரு இடங்களில் மின் விநியோகம் செய்யப்பட்டது. தொடர்ந்து உடைந்த மின் கம்பங்களை சீரமைக்கும் பணி நேற்று காலை முதல் நடைபெற்று வந்தது. மாலை 5 மணி முதல் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது. ஜலகண்டாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் பெய்த மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மேலும், மழையால் சேதமடைந்த வீடுகளை கணக்கெடுப்பு செய்து உரிய நிவாரணம் வழங்க வருவாய்த்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: