புதுவை கடற்கரை காந்தி திடலில் உயர் கல்வி கண்காட்சி இன்று தொடங்குகிறது

புதுச்சேரி, மே 29: புதுச்சேரி தொழிலாளர் துறை ஆணையரும், வேலைவாய்ப்பு பயிற்சி இயக்குநருமான வல்லவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி தொழிலாளர் துறையின் வேலைவாய்ப்பகத்தின் சார்பில் உயர் கல்வி கண்காட்சி நடத்த புதுவை காந்தி திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சி இன்று (29ம் தேதி) தொடங்கி ஜூன் 2ம் தேதி வரை 5 தினங்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறுகின்றது. இக்கண்காட்சியை முதல்வர் நாராயணசாமி தொடங்கி வைக்கிறார். தொழிலாளர் துறை அமைச்சர் கந்தசாமி, லட்சுமிநாராயணன் எம்எல்ஏ, தொழிலாளர் துறை செயலாளர் ஜவகர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

 மாணவ, மாணவிகள் தங்கள் பள்ளி படிப்பை முடித்த பிறகு மேற்கொண்டு தொடர வேண்டிய தகுந்த உயர் கல்வி மற்றும் கல்வி நிறுவனங்களை தேர்ந்தெடுப்பதற்கான வழிகாட்டுதலை அளிப்பதே இக்கண்காட்சியின் முக்கிய நோக்கமாகும். இக்கண்காட்சியில் புதுவை யூனியன் பிரதேசம் மற்றும் அண்டை மாநிலமான தமிழகத்திலிருந்தும் மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஐடிஐ, நர்சிங் கல்வி நிறுவனங்களில் உள்ள பாடப்பிரிவுகளை பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வை இக்கண்காட்சி ஏற்படுத்தும். இதன் மூலம் நேரடியாக கல்லூரிக்கு சென்று தகவல்களை பெறும் சிரமத்தை பெற்றோர்களும், மாணவர்களும் தவிர்க்கலாம். இதன் வாயிலாக மாணவர்கள் திறன் வாய்ந்த உயர் கல்வி நிறுவனங்களில் சேர்ந்து பயன் பெறலாம். மேலும், மே 30, 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் பலதரப்பட்ட உயர் கல்விகளை பற்றி வல்லுநர்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.இக்கண்காட்சியில் எஸ்எஸ்எல்சி, பிளஸ்-2 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களது எதிர்கால உயர் கல்வியை தேர்வு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories: