டயாலிசிஸ் செய்தால் உயிரிழக்க வாய்ப்பு நர்ஸ் கூறியதை கேட்ட அதிர்ச்சியில் நோயாளி சாவு

கோவை, மே 28: கோவை அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்ய வந்த நோயாளியிடம் டயாலிசிஸ் செய்தால் உயிரிழக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவமனையின் நர்ஸ் கூறியதால் அதிர்ச்சியில் நோயாளி உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம் முருகானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் அன்வர்அலி(57). மனைவி சபுராமா(48). இவர்களுக்கு சர்மிளா பானு, ஆதிதபானு என 2 மகள், மன்சூர் அலிகான் என்ற மகனும் உள்ளார். மகளுக்கு திருமணமாகிவிட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக அன்வர் அலி சிறுநீரக கோளாறு காரணமாக அவதிபட்டு வந்தார். இதற்காக, திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு, மருத்துவர்கள் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி, கடந்த 19ம் தேதி கோவை அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் செய்து கொள்ள வந்தார். அப்போது, பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் அன்வர் அலியிடம் இங்கு டயாலிசிஸ் செய்தால் நீங்கள் இறந்துவிடுவீர்கள் என தெரிவித்துள்ளார்.

இதை கேட்ட அதிர்ச்சியில் அன்வர்அலி மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து அன்வர்அலியின் மகள்கள் சர்மிளாபானு, ஆதிதபானு கூறியதாவது: கோவை அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த நர்ஸ் ஒருவர் என் தந்தையிடம் உங்களுக்கு டயாலிசிஸ் செய்தால் 90 சதவீதம் இறப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என தெரிவித்தார். இதனால், எங்கள் தந்தை பயந்துபோனார். இது தொடர்பாக நர்சிடம் வாக்குவாதம் செய்தோம். அப்போது, எங்கள் தந்தை நர்சு கூறிய வார்த்தையால் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தார்.

அவரை மருத்துவர்கள் வார்டிற்கு கொண்டு சென்று பரிசோதனை செய்தனர். பின்னர், அவர் இறந்துவிட்டதாக கூறினர். நர்ஸ் கூறிய வார்த்தையின் காரணமாக தான் எங்கள் தந்தை உயிரிழந்தார். எனவே, சம்பந்தப்பட்ட நர்சு மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது குறித்து மருத்துவமனையின் டீன் அசோகன் கூறுகையில், ‘‘இது போன்ற சம்பவம் நடக்க வாய்ப்பு இல்லை. புரோக்கர்கள் யாராவது அவர்களிடம் பேசி இருக்கலாம். இருப்பினும், சம்பவம் குறித்து புகார் அளித்தால் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: