மேலூர் அருகே அய்யனார் கோயில் புரவி எடுப்பு

மேலூர், மே 28: மேலூர் அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட புரவி எடுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மேலூர் அருகில் சாத்தமங்கலத்தில் உள்ளது  ஹரிஹர புத்திர அய்யனார் கோயில். சாத்தமங்கலம், மீனாட்சிபுரம், நடுப்பட்டி கிராம மக்களுக்கு சொந்தமான இக் கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி மாதத்தில் திருவிழா நடைபெறும். இத் திருவிழாவில் பக்தர்களின் நேர்த்தி கடனிற்காக புரவிகளை இ.மலம்பட்டியில் உள்ள பொட்டலில் ஒரு வாரத்திற்கு முன்பாகவே தயார் செய்யப்பட்டது.

விழாவின் முத்தாய்பாக நேற்று இ.மலம்பட்டியில் இருந்து 10 கிமீ., தூரம் புரவிகள் ஊர்வலம் கிளம்பியது. கோயிலின் சேமக் குதிரைகள் எனப்படும் 3 புரவிகள் முன்வர, பக்தர்களின் நேர்த்திக்கடன் புரவிகள் பின் தொடர்ந்து வந்தது. அப் புரவிகளை சுமந்தபடி ஏராளமான பக்தர்கள் நேற்று மாலை சாத்தமங்கலத்திற்கு கொண்டு வந்தனர். முன்னதாக மேள தாளம் முழங்கியபடி ஊர்வலமாக வரும் புரவிகளுக்கு வழியெங்கும் பக்தர்கள் மாலை மரியாதை செய்து வரவேற்பு அளித்தனர்.

Related Stories: