குவிந்து கிடக்கும் குப்பை வேளாண் விரிவாக்க மையங்களில் உயிர் உரங்கள் விற்பனை

பாபநாசம், மே 25:  அம்மாப்பேட்டை வேளாண் உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:பயிர்களுக்கு  இடும் ரசாயன உரங்கள் மண்ணில் பல்வேறு வகையான வேதி மாற்றங்கள் அடைந்த  பின்னரே பயிர்களால் எடுத்து கொள்ளப்படுகின்றன. இவ்வாறு வேதி மாற்றமடைய  மட்கு சத்து உரங்கள் மிகுதியான அளவில் மண்ணில் இருக்க வேண்டும். ஆனால் மாறி  வரும் காலச்சூழலில் தேவையான அளவு குப்பை எரு, தழை எரு, பசுந்தாள் உரங்களை  மண்ணில் இட முடியாத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் அதிக பொருட்செலவில்  வாங்கி பயன்படுத்தும் ரசாயன உரங்கள் முழுமையாக பயிர்கள் எடுத்து கொண்டு  பலனளிக்க இயலாத நிலை உள்ளது. இதனால் இடும் உரங்களுக்கேற்ற அளவு மகசூல்  கிடைப்பதில் பிரச்னை உருவாகிறது. இக்குறைகளை போக்கி மண்ணை வளப்படுத்தி  இடும் உரங்களை முழுமையாக பயிர்கள் எடுத்து கொள்ள செய்பவை தான் உயிர்  உரங்கள். நெல், உளுந்து, பயறு, கடலை, எள், பருத்தி ஆகிய பயிர்களுக்கு ஏற்ற  பல்வேறு வகையான உயிர் உரங்கள் கிடைக்கின்றன.

Advertising
Advertising

தழைச்சத்தை கிரகித்து  கொடுக்கும் அசோஸ்பைரில்லம் (நெல்) ரைசோபியம் (உளுந்து, பயறு ) மணிச்சத்தை  கரைத்து கொடுக்கும் பாஸ்போபாக்டீரியா ஆகிய உயிர் உரங்கள் மண்ணில் தன்மையை  மேம்படுத்தி சத்துக்களை பயிர்கள் சுலபமாக எடுத்து கொள்ள உதவுகின்றன.  திடவடிவிலான உயிர் உரங்கள் தலா 200 கிராம் கொண்ட 6 ரூபாய்  பாக்கெட்டுகளிலும், திரவ வடிவிலான உயிர் உரங்கள் 500 மிலி மற்றும் 1 லி  கொள் கலங்களிலும் லிட்டர் ஒன்று 300 விலையில் அனைத்து வேளாண் விரிவாக்க  மையங்களிலும் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகின்றன. உயிர்  உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் கூடுதலாக மட்கு சத்தை அளிக்கும் அங்கக  அமிலங்கள் நுண்ணூட்ட சத்துக்களும் கிடைப்பதால் மண்வளம் அதிகரித்து நீடித்த  நிலையான வேளாண்மைக்கு வழிவகுக்கிறது. எனவே அனைத்து விவசாயிகளும் தவறாது  தங்களுக்கு வழங்கப்படும் உயிர் உரங்களை பயிர்களுக்கு இட்டு பயனடையலாம்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: