தொழிலதிபர், உறவினர்களை தாக்கி கொலை மிரட்டல்

புதுச்சேரி, மே 21: அரியாங்குப்பம் அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட விரோதம் காரணமாக தொழிலதிபர் மற்றும் அவரது நண்பர்கள், உறவினர்களை சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். புதுவை, அரியாங்குப்பம், ஓடைவெளியை சேர்ந்தவர் ராஜேஷ்(30), தொழிலதிபர். மாஞ்சாலை காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்ற நிலையில் அதற்கான குழுவினருடன் இணைந்து செயல்பட்டார். நேற்று முன்தினம் அங்கு கச்சேரி உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் நாங்கள் விரும்பிய பாடல் எதுவும் பாடவில்லை என சண்முகா நகர் பிரகாஷ்(21) உள்பட சிலர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அங்கிருந்த ஊர் முக்கியஸ்தர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Advertising
Advertising

 பின்னர் கலைநிகழ்ச்சி முடிந்து ராஜேஷ் வீடு திரும்பிய நிலையில், நேற்று அங்கு வந்த பிரகாஷ் மற்றும் அவரது நண்பரான அரியாங்குப்பம் கிருஷ்ணன் (23) மற்றும் கூட்டாளிகள் 4 பேர் ராஜேசை அசிங்கமாக திட்டி பீர்பாட்டில் மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கினர். இதை தடுக்க முயன்ற அவரது மனைவி சூர்யகலா (27), தாய் ருக்மணி (53), நண்பர்களான செல்வம், மணிகண்டன் ஆகியோரையும் சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்த கும்பல் அங்கிருந்து தப்பிஓடி விட்டது. இதில் படுகாயமடைந்த செல்வம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஜிப்மர் ஊழியரான மணிகண்டன் ஜிப்மரில் சேர்க்கப்பட்டார். மற்றபடி தலையில் காயமடைந்த ராஜேஷ் மற்றும் அவரது மனைவி, தாய் ஆகியோர் லேசான காயத்துடன் உயிர்தப்பினர்.

 இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீசில் ராஜேஷ் உடனடியாக முறையிட்டார். அதன்பேரில் பிரகாஷ், கிருஷ்ணன் மற்றும் கூட்டாளிகள் 4 பேர் மீது ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின்கீழ் வழக்குபதிந்த சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தம்மன் தலைமையிலான போலீசார், தலைமறைவான கும்பலை தேடி வருகின்றனர். இதில் பிரகாஷ் தனியார் கல்லூரியில் பிகாம் படித்து வருகிறார். கிருஷ்ணன் மேட்டுப்பாளையம் 3 ரவுடிகள் கொலை வழக்கு குற்றவாளி ஆவார். இந்த சம்பவத்தையடுத்து அங்கு பதற்றம் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

Related Stories: