தேனி மாவட்டத்தில் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட கோரிக்கை

தேனி, மே 15: தேனி மாவட்டத்தில் சொந்தக் கட்டிடமில்லாமல் வாடகை கட்டிடத்தில் செயல்படும் நூலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்டித் தரவேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தேனி மாவட்டத்தில் தேனியை தலைமையிடமாகக் கொண்டு மத்திய நூலகம் உள்ளது. இதுதவிர 70 கிளை நூலகங்கள் உள்ளன. ஊர்புற நூலகங்கள் 51ம், பகுதி நேர நூலகங்கள் 30ம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் மூலம் கிராமந்தோறும் நூலகங்கள் உள்ளன.

தேனி மாவட்டத்தில் உள்ள நூலகங்களில் மொத்தமுள்ள நூலகர்களில் 22 பணியிடங்கள் காலியாக உள்ளன. கிளை நூலகங்களில் பெரியகுளம் வடகரை, உத்தமபாளையம், கோட்டூர், கூடலூர், போடிதிருமலாபுரம், லோயர்கேம்ப், ஹைவேவிஸ் ஆகிய 7 கிளை நூலகங்கள் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகின்றன.

தேனி மாவட்டத்தில் உள்ள மொத்தமுள்ள நூலகங்களில் பணிபுரியும் நூலகர்கள், பணியாளர்கள், இதர செலவிற்கென மாதம் சுமார் ரூ.14 லட்சம் வரை செலவாகும் நிலையில், இதற்கான வருவாய் ஒதுக்கீடு இல்லாத நிலையே நீடிக்கிறது. நூலகங்கள் செயல்பாட்டுக்கு தமிழக அரசு, அந்தந்த உள்ளாட்சிகளில் வசூலிக்கப்படும் சொத்துவரியில் 10 சதவீதத்தை நூலக செயல்பாட்டுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி மூலம் ஆண்டுக்கு ரூ.90 லட்சம் வரை சொத்துவரி மூலம் வருவாய் கிடைக்கிறது. அதேசமயம், ஆண்டுக்கு நூலக பராமரிப்பு, சம்பளம் உள்ளிட்ட செலவினமாக ரூ.1 கோடியே 70 லட்சம் வரை செலவாகிறது. எனவே, சொத்து வரி மூலம் கிடைக்கும் வருவாய் போதாமல் அரசு திருப்பிச் செலுத்தும் வகையில் ஒதுக்கும் நிதியை முழுமையாக நம்பி நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன.

இதுகுறித்து நூலகத்தரப்பினர் சிலரை கேட்டபோது, ‘உள்ளாட்சி மூலம் கிடைக்கும் சொத்து வரியில் 10 சதவீதம் நூலகத்திற்கு ஒதுக்கும் நிதி போதாது என்பதால், அரசு ஒதுக்கும் நிதியை பயன்படுத்தி அரசு அந்நிதியை திருப்பிச் செலுத்த முடியாதநிலை உள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை வரும் புத்தகங்களை கிளை நூலகங்களில் அடுக்கி வைக்கவே நூலகங்களில் உள்ள அலமாரிகள் போதிய அளவில் இல்லாமல் உள்ளதால் புத்தகங்களை அடுக்க முடியாத நிலையே உள்ளது. எனவே, நூலகங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு கலெக்டர் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: