சர்வீஸ் சாலையில் இயக்காமல் மாநகர பஸ் டிரைவர்கள் அடாவடி: பயணிகள் கடும் அவதி

திருவொற்றியூர்: கத்திவாக்கம் மேம்பால சர்வீஸ் சாலை வழியாக மாநகர பேருந்துகளை இயக்காமல், மேம்பாலத்தின் மீது செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து தடம் எண் 56, 28பி, 159,  159ஈ, 1சி ஆகிய மாநகர பேருந்துகள் கத்திவாக்கம் நெடுஞ்சாலை வழியாக சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் கத்திவாக்கம் மேம்பாலத்திற்கு கீழ் உள்ள சர்வீஸ் சாலை வழியாக சென்று, அங்குள்ள நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றிச் செல்வது வழக்கம். எண்ணூர் அனல்மின் நிலைய ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் அங்குள்ள தபால் நிலையம், வங்கி ஆகியவற்றுக்கு வந்து செல்பவர்கள் இந்த பஸ் நிறுத்தத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், சமீபகாலமாக மேற்கண்ட பேருந்துகள் பெரும்பாலும் சர்வீஸ் சாலையில் செல்லாமல், கத்திவாக்கம் மேம்பாலத்தின் மீது சென்று விடுகின்றன. இதனால், எண்ணூர் அனல்மின் நிலைய அலுவலகத்தில் பணி புரிவோர் மற்றும் அதன் அருகில் உள்ள வங்கி மற்றும் தபால் நிலையத்திற்கு வந்து செல்பவர்கள் பேருந்து ஏறுவதற்காக மேம்பாலத்தை சுற்றி வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், முதியவர்கள், பெண்கள் உள்பட பலர் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து  எண்ணூர்  பேருந்து நிலைய கிளை மேலாளருக்கு பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, கத்திவாக்கம் மேம்பால சர்வீஸ் சாலையில் வழக்கம்போல் பேருந்துகளை இயக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: