தொட்டியம் அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்து 100 நாள் பெண் தொழிலாளர்கள் 36 பேர் காயம்

தொட்டியம், மே 15:   தொட்டியம் அருகே உள்ள தோளூர்பட்டி  ஊராட்சிக்குட்பட்ட பாலசமுத்திரம், தேனி நகரில் இருந்து குட்டை தூர்வாரும்  பணிக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றுள்ளனர். வேலை  முடிந்து 5 மணி அளவில் திரும்பியபோது திருச்சி-நாமக்கல் சாலையில் தனியார்  கல்லூரி அருகே லோடு ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் 36 பேர்  காயமடைந்துள்ளனர்.  இது குறித்து அப்பகுதியை சேர்ந்த சமூக  ஆர்வலர் செல்லதுரை என்பவர் கூறுகையில், மணியம்பட்டியில் நடைபெற்ற குட்டை  தூர்வாரும் பணிக்கு 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 43 பேர் லோடு  ஆட்டோவில் மீண்டும் பாலசமுத்திரம் மற்றும் தேனி நகருக்கு திரும்பி உள்ளனர்.  லோடு ஆட்டோ டிரைவர் வாகனத்தை மிக வேகமாக ஓட்டி வந்ததால் திடீரென டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த லோடு ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது என்றார்.

 இந்த விபத்தில்  திலகவதி(48), பத்மாவதி (55), புவனேஸ்வரி (38), பழனியம்மாள்(55),  பிச்சையம்மாள்(62), பெரியக்காள்(41), லெட்சுமி(55),  ஜெயலெட்சுமி(53),  பரமேஸ்வரி(58), குமுதா(29), மருதாயி(48), கமலா(46) உட்பட 36 பேர்  காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களை அப்பகுதியில் இருந்தோர் 108  மற்றும் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் தொட்டியம், நாமக்கல் அரசு  மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  லோடு ஆட்டோ டிரைவர் தப்பியோடிவிட்டார். விபத்து குறித்து தகவலறிந்த முசிறி டிஎஸ்பி தமிழ்மாறன் உத்தரவின் பேரில் தொட்டியம்  போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: