கஜா புயலால் சேதமடைந்த அங்கன்வாடி மையம் சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு

திருமயம், மே 15: திருமயம் அருகே கஜா புயலால் சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள புலிவலம் கிராம அங்கன்வாடியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த  ஆண்டு அப்பகுதியில் வீசிய கஜா புயலின்போது அங்கன்வாடி மையம் அருகே இருந்த ராட்சத மரம் ஒன்று அங்கன்வாடி கட்டிடத்தில் வேரோடு சாய்ந்தது. இதில் அங்கன்வாடி கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து சேதமடைந்தது. இதனால் அங்கன்வாடி ஊழியர்கள், குழந்தைகள் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள பள்ளியில் தற்போது தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளி மாணவர்களுடன் அங்கன்வாடி குழந்கைள் இருப்பதால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனிடையே புயல் பாதித்து 5 மாதங்களை கடந்த நிலையில் இதுநாள்வரை புலிவலம் அங்கனவாடியை சரி செய்ய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதி அங்கன்வாடி குழந்தைகளின் நலன் கருதி சேதமடைந்த அங்கன்வாடி கட்டிடத்தை உடனே சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: