தாமதமாகும் ரேஷன் அரிசி வினியோகம்

புதுச்சேரி,  மே 14:  ரேஷன் அரிசி மாதிரி ஆய்வு முடிந்தும் அதன் சான்றிதழ் இதுவரை  கிடைக்காததால் பொதுமக்களுக்கான ரேஷன் அரிசி விநியோகம் தாமதமாகி வருகிறது.புதுச்சேரியில்  ரேஷன் கடைகளில் சிவப்பு அட்டைகளுக்கு 20 கிலோ அரிசியும், மஞ்சள்  அட்டைதாரர்களுக்கு 10கி அரிசியும் மாதந்தோறும் விநியோகிக்கப்பட்டு  வருகிறது. இதற்காக தனியாரிடம் இருந்து தரமான ஒற்றை அவியல் அரிசி பாப்ஸ்கோ  மூலம் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.இந்தாண்டு ஜனவரி, பிப்ரவரி,  மார்ச் ஆகிய 3 மாதங்களுக்கு இலவச அரிசி வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. சிவப்பு  அட்டைகளுக்கு கடைகளில் அரிசியும், மஞ்சள் அட்டைதாரர்களுக்கு 10 கிலோ  அரிசிக்கான பணத்தை வங்கி கணக்கில் செலுத்தவும் கவர்னர் கிரண்பேடி  உத்தரவிட்டார். ஆனால் மக்களவை ேதர்தல் அறிவிக்கப்பட்டதால் அரிசி வழங்குவது  தடைபட்டது. இதனால் தேர்தல் முடிந்தவுடன் அரிசி வழங்கப்படுமென  கூறியிருந்தார். அதன்படி தேர்தல் ஆணையம் இலவச அரிசி வழங்க தடையில்லை என  கூறியதையடுத்து அரிசி வழங்குவதற்கான நடவடிக்கையை புதுவை அரசு  தீவிரப்படுத்தியது. கடந்த 7ம்தேதி காஞ்சிபுரம் மற்றும் கடலூர்  மாவட்டங்களில் இருந்து 5 லாரிகளில் 95 டன் அரிசி லோடு தட்டாஞ்சாவடி  ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்திற்கு வந்தது. அந்த அரிசியை குடிமைபொருள்  வழங்கல் துறை அதிகாரிகள் சோதனையிட்டு ஆய்வு செய்தனர். அதன் மாதிரிகள்  கோரிமேடு ஆய்வகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

 பின்னர் அரிசி  மூட்டைகள் மத்திய உணவு குடோனில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. காரைக்கால்  மற்றும் புதுச்சேரியில் சில பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்கு இலவச அரிசி  அனுப்பி வைக்கப்பட்டு விட்டன. இருப்பினும் ஆய்வகத்தில் இருந்து சான்றிதழ்  பெறப்பட்ட பிறகே அவற்றை விநியோகிக்க வேண்டுமென ரேஷன் கடை ஊழியர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் சில ரேஷன் கடைகளுக்கு வாடகை கட்டணம்  செலுத்தப்படாத நிலை இருப்பதால் அவற்றை திறப்பதிலும் சிக்கல் இருப்பதாக  ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டன. இதுபோன்ற காரணங்களால் ரேஷன்  ஊழியர்களுக்கான மாத ஊதியத்தை அரசு விநியோகித்தும் இலவச அரிசியை மக்களுக்கு  விநியோகிப்பதில் தொடர்ந்து காலதாமதம் நீடிக்கிறது. இன்னும் ஓரிரு  நாளில் ரேஷன் அரிசி மாதிரி குறித்த சான்றிதழ் கிடைக்கும் பட்சத்தில் இவ்வார  இறுதியில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ரேஷன் அரிசி வழங்கப்படலாம் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: