திருச்சி மாநகரில் பொதுஇடங்களில் கொட்டப்படும் குப்பையால் தொற்று நோய்அபாயம் உடனுக்குடன் அகற்ற வலியுறுத்தல்

திருச்சி, மே 14: திருச்சி மாநகரில் குப்பையில்லா நகரமாக அறிவித்து குப்பை தொட்டிகள் அப்புறப்படுத்தியால் பொது இடங்களில் குவியும் குப்பைக்கழிவுகளால் தொற்று நோய் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். திருச்சி மாநகரில் ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில பல்வேறு தூய்மை பணிகள் நடந்து வருகிறது. இதில் குப்பையில்லா நகரமாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நகரில் பொது இடங்களில் வைக்கப்பட்ட குப்பை தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் படிப்படியாக குறைத்து வந்தது. இதனால் மாநகரில் குப்பை தொட்டிகளை பார்ப்பது அரிதாகி விட்டது. இதனால் நகரும் தூய்மையாகிவிடும் என பொதுமக்கள் மகிழ்ச்சியோடு இருந்தனர்.

ஆனால் குப்பை தொட்டிகள் மட்டுமே எடுக்கப்பட்டதே தவிர, அந்த இடத்தில் குப்பைகள் கொட்டுவதை மட்டும் நிறுத்தவில்லை. கொட்டப்படும் குப்பைகளை தடுத்திட மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. இதனால் தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளை கொட்டுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். மேலும் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களும் குப்பை தொட்டியை எடுத்துவிட்டோம் என்று கூறி அந்த இடத்தில் குப்பைகளை அப்புறப்படுத்துவம் இல்லை என்று கூறப்படுகிறது.

இதன் காரணமாக நகரின் பல இடங்களில் தற்போது பொது இடங்களில் குப்பை கழிவுகள் குவிந்து கிடப்பதை காண முடிகிறது. அந்த வகையில் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன்கோவில் பகுதியில் சாலையோரம் உள்ள பொது இடத்தில் குப்பைகளை அப்பகுதியினர் கொட்டியதால் குப்பைகழிவுகள் குவிந்து கிடக்கிறது. இதேபோல் எடமலைப்பட்டிபுதூர் வாட்டர் டேங்க் அருகில் சாலையிலேயே குப்பைகளை கொட்டிச் செல்கின்றனர். இந்த குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தாமல் துர்நாற்றம் வீசுவதாகவும், போக்குவரத்துக்கு மிகவும் இடையூறாக உள்ளதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.  மேலும் குப்பைகள் வாரக்கணக்கில் தேங்கி கிடப்பதால் தொற்றுநோய் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே குப்பைகளை உடனுக்குடன் அப்புறப்படுத்தி, மாநகரில் உள்ள அனைத்து பகுதிகளை ஆய்வு செய்து குப்பை தொட்டிகள் எடுக்கப்பட்ட இடத்தை கண்காணித்து மீண்டும் குப்பைகள் கொட்டாத வகையில் நடவடிக்கை எடுத்து மாநகரின் தூய்மையை உறுதிப்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: