திருப்பரங்குன்றம் தொகுதி வாக்குபதிவு இயந்திரத்தில் பெயர், சின்னம் பொருத்தும் பணி துவக்கம் நாளை வரை நடைபெறுகிறது

மதுரை, மே 14: திருப்பரங்குன்றம் தொகுதியில் வாக்குபதிவு இயந்திரத்தில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நேற்று துவங்கியது. திருப்பரங்குன்றம் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, அதிமுக, அமமுக உள்ளிட்ட 37 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஒரு வாக்கு பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் புகைப்படம் பெயர், சின்னம் மட்டுமே பொருத்த முடியும். இத்தொகுதியில் 37 வேட்பாளர்களுடன் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என கூறும் நோட்டாவுடன் சேர்த்து மொத்தம் 38 சின்னம் பொருத்த வேண்டும். இதனால் இத்தேர்தலில் 3 மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது.

இத்தொகுதியில் மொத்தம் 297 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 1,069 வாக்குபதிவு இயந்திரமும், 356 கட்டுப்பாட்டு கருவியும் 386 விவிபெட் இயந்திரமும் பயன்படுத்தப்பட உள்ளது. வேட்பாளர்களின் புகைப்படம், பெயர், சின்னம் ஆகியவற்றை வாக்குபதிவு இயந்திரத்தில் பொருத்தும் பணி நேற்று திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் நடந்தது.

தேர்தல் பொது பார்வையாளர் ஓம்பிரகாஷ் ராய் மேற்பார்வையில், வேட்பாளர்களின் ஏஜென்டுகள் முன்னிலையில், வாக்குபதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையின் பூட்டு சீல் உடைக்கப்பட்டது. பின் தேர்தல் நடத்தும் அலுவலர் பஞ்சவர்ணம், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் நாகராஜன் தலைமையிலான பணியாளர்கள் 26 மண்டலமாக பிரித்து வாக்குபதிவு இயந்திரத்தில் புகைப்படத்துடன் கூடிய வேட்பாளர் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

முன்னதாக 37 வேட்பாளர்கள் மற்றும் நோட்டா உள்பட 38 சின்னம், பெயர், வரிசை எண் ஆகியவற்றை அதற்கான சாப்ட்வேரில் பதிவேற்றம் செய்யப்பட்டு, அதனை 386 விவிபெட் இயந்திரத்தில் பதிவிறக்கம் செய்தனர். அதன்பின்பு, வாக்குபதிவு இயந்திரத்தில் வேட்பாளர் பட்டியல் பொருத்தப்பட்டது. இப்பணி நாளை வரை நடைபெற உள்ளது.

அதன்பின்பு ஒவ்வொரு சின்னத்தில் மாதிரி வாக்குபதிவு செய்து, முறையாக மின்னணு வாக்கு இயந்திரம் இயங்குகிறதா என பரிசோதனை செய்து, அந்த ஓட்டுகள் அழிக்கப்பட்ட பின்பு, பாதுகாப்பு அறையில் வைக்கப்படும். மின்னணு வாக்கு இயந்திரம் உள்ள அறைக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: