அக்காள் சாவில் மர்மம் ஆஸ்டின்பட்டி போலீஸ் மீது வாலிபர் புகார்

மதுரை, மே 14: அக்காள் சாவில் மர்மம் இருப்பதாகவும், போலீசார் நடவடிக்கை எடுக்க மறுப்பதாகவும் கூறி, சகோதரர் கலெக்டரிடம் புகார் மனு கொடுத்தார். திருமங்கலம் அருகே மேலக்கோட்டையை சேர்ந்த முருகன் நேற்று கலெக்டர் நாகராஜனிடம் கொடுத்த புகார் மனுவில், ‘‘கூத்தியார்குண்டுவை சேர்ந்த முத்துராமனுக்கு எனது அக்கா சத்தியா(35)வை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் முடித்துக்கொடுத்தோம். இந்நிலையில் கடந்த மாதம் 6ம் தேதி சத்தியா உடல் கருகிய நிலையில் பிணமாக வீட்டில் இருந்தார்.

அவருடைய கணவர் உடலிலும் தீ காயம் இருந்தது. நான் சென்று பார்த்த போது, வீட்டில் மண்எண்ணெய் துர்நாற்றம் வீசியது. ஆனால், சிலிண்டர் வெடித்து தீ பிடித்து இறந்ததாக கூறினர். அவரது இறப்பில் மர்மம் உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என ஆஸ்டின்பட்டி போலீசில் புகார் கொடுத்தோம். ஆனால், போலீசார் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. போலீசார் உடல்கூறு பரிசோதனைக்கான அறிக்கையை தர மறுக்கின்றனர். உண்மை நிலையை கூறவும் மறுக்கின்றனர். மர்ம சாவு குறித்து விசாரித்து குற்றவாளியை தண்டிக்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். அவருடன் இறந்த சத்தியாவின் மகன்கள் யோகராஜ், வேல்ராஜ் உடன் வந்திருந்தனர்.

Related Stories: