நீடிக்கும் பறக்கும் படை சோதனையால் பின்னலாடை தொழிலாளர்கள் வேலையிழப்பு

திருப்பூர், மே 7: மக்களவை தேர்தலையொட்டி, கடந்த 11ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிமுறை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதனால், வியாபாரிகள், பொது மக்கள் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தியாளர்கள் இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களுக்கு பனியன், ஜட்டி, டி.சர்ட், என கோடை காலம், குளிர் காலம் ஆகிய கால நிலைக்கு ஏற்ப ஆடை தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. தேர்தல் நடத்தை  விதிமுறைகளால், திருப்பூர் உள்நாட்டு ஆடை உற்பத்தி நிறுவனங்களின், கோடைக்கால வர்த்தகம் கடுமையாக  பாதிக்கப்பட்டுள்ளது. ஆவணமின்றி கொண்டுசெல்லும் பணத்தை, தேர்தல் பறக்கும்படையினர் பறிமுதல் செய்கின்றனர். தேர்தல் கால கட்டுப்பாடுகளால், திருப்பூர் நிறுவனங்களின் வழக்கமான ஆடை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சூலூர் உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதனால் திருப்பூர், கோவை, கரூர், மதுரை ஆகிய மாவட்ட எல்லைகளில் போலீசார் பலத்த சோதனைகள் நடந்து வருகிறது. இதனால் தொழில் நகரங்களான திருப்பூர், கோவை, ஈரோடு, மதுரை ஆகிய பகுதிகளில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.ஆந்திரா, கர்நாடகா, டெல்லி, மும்பை, கொல்கத்தா, கேரளா என பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிய ஆடைக்கான தொகையை, வர்த்தகர்களிடமிருந்து பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. ஒருபகுதி தொகையை மட்டுமே வழங்குகின்றனர். தேர்தல் முடிவிற்கு பின் மீதி தொகையை வழங்குவதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதனால், சிறு, குறு பின்னலாடை உற்பத்தியாளர்கள் கொள்முதலுக்கு தேவையான நிதி இல்லாததால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்திக் கொண்டனர்.ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு, உரிய காலத்துக்குள் கட்டணத்தை வழங்க, சிறு, குறு ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாறுகின்றன. பெரும்பாலான சிறு,குறு ஜாப்-ஒர்க் நிறுவனங்களுக்கு வேலைகள் இல்லாததால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்திக்கொண்டதால் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர்.

Related Stories: