சுலைவான் சாலையில் தனியார் சோதனை சாவடி

ஊட்டி, மே 3: ஊட்டி நகராட்சிக்குட்பட்ட விஜயநகரம் பகுதிக்கு செல்லும் சாலையில் தனியார் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர். ஊட்டி நகராட்சிக்குட்பட்ட விஜயநகரம் பகுதிக்கு சேரிங்கிராஸ் பகுதியில் இருந்து  சுலைவான் சாலை செல்கிறது. இச்சாலையை கடந்த பல ஆண்டுகளாக விஜயநகரம் பகுதி மக்கள், எச்எம்டி, நொண்டிமேடு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான மக்கள் அவசர தேவைகளான மருத்துவ சேவைகளுக்கும், பள்ளிச் செல்லும் குழந்தைகளும் பயன்படுத்தி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இச்சாைலயை நகராட்சி சார்பில் தார் சாலையாக மாற்றிக் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், இச்சாலையில் நேற்று தனியார் சார்பில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்திக்குள்ளாகினர். மேலும், சரவணன் என்பவர், பல ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வரும் இச்சாலையில் சோதனை சாவடி அமைக்கும் பணிகளை மேற்கொள்ள கூடாது என ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, அங்கு வந்த ஓய்வு பெற்ற காவல் அதிகாரி ஒருவர், இவ்வழித்தடத்தில் இரவு நேரத்தில் வாகனங்கள் சென்று வருவதால், எங்களுக்கு தொந்தரவாக உள்ளது. அதனால் நாங்கள் சோதனை சாவடி அமைக்கிறோம், என்றார். மேலும், இவருக்கு ஆதரவாக அங்கு சில போலீசாரும் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.

ேமலும், நகராட்சி சாலையில் சோதனை சாவடி அமைக்கப்படுகிறது. இதனை தடுக்க வேண்டும் என பலரும் நகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களும் கண்டு கொள்ளவில்லை. இதனால், பல ஆண்டுகளாக விஜயநகரம், ரோஜா பூங்கா மற்றும் எச்எம்டி., பகுதிகளில் வாழும் மக்கள் பயன்படுத்தி வந்த சாலைக்கு தடை ஏற்பட்டுள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள் உடனடியாக ஆய்வு கொண்டு சுலைவான் சாலையில் சோதனை சாவடி அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: