நீடாமங்கலம் பகுதி ஆறுகளில் பள்ளம் தோண்டி தொடரும் மணல் திருட்டு

நீடாமங்கலம், மே 1: நீடாமங்கலம் பகுதியில் உள்ள ஆறுகளில் நடைபெறும் மணல் திருட்டை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதியில் கல்லணையிலிருந்து வரும் பெரிய வெண்ணாற்றிலிருந்து சிறிய வெண்ணாறு, கோரையாறு, பாமணியாறு என மூன்று ஆறுகள் நீடாமங்கலம் நகரை சுற்றி செல்கின்றன. இந்த ஆறுகளில் பெரிய வெண்ணாற்றில் வாசுதேவமங்கலம், பன்னிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும், சிறிய வெண்ணாற்றில் மேட்டுச்சாலை, கொட்டையூர், பாப்பையன் தோப்பு, பழையநீடாமங்கலம், வையகளத்தூர், பழங்களத்தூர், ஒட்டகுடி மேல்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், கோரையாற்றில் பெரியார்தெரு பின்புறம், கண்ணம்பாடி, கீழாளவந்தசேரி, கற்கோவில், விழல்கோட்டகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும், பாமணியாற்றில் பரப்பனாமேடு, பூவனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் இரவு நேரங்களில் மணலை திருடி அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். பெரியார் தெரு பின்புறம் உள்ள கோரையாற்றில் 8 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருட்டு நடைபெறுகிறது.

அதுவும் சில இடங்களில் பொக்லைன் இயந்திரம் மூலம் டிராக்டர், லாரிகளில் மணலை ஏற்றி வெளி மாவட்டங்களுக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். சிலர் சாக்கு மூட்டைகளிலும், மாட்டு வண்டியிலும் மணல் அள்ளுவதாக கூறப்படுகிறது. இந்த மணல் திருட்டு சம்பவம் பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. நீடாமங்கலத்தில் உள்ள சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆறுகளில் மணல் திருடுவதால் பல இடங்களில் ஆறுகள் வறண்டு சுக்கான் கற்களாக பாலைவனம் போன்று உள்ளது. ஆற்றங்கரையில் உள்ள நிலத்தடி நீர் மோட்டார்களிலும் தண்ணீர் வரத்து குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படும் நிலை உள்ளது. இதனால் ஆறுகள் பல அடி ஆழத்திற்கு கீழ் சென்று விட்டது. பாசன வாய்க்கால்கள் மேல் சென்றதால் ஆறுகளில் வரும் தண்ணீர் ஏறி பாய முடியாமல் விவசாயிகள் ஒரு போகம் கூட சாகுபடி செய்ய முடியாத நிலை உள்ளது.

பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாலைவனம் போன்று தரிசாக உள்ளது. ஆறுகளை நம்பி விவசாயிகள் சாகுபடி செய்து நீண்ட நாட்கள் ஆகி விட்ட நிலையில் இனி வருங்காலங்களில் மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முழுமையாக சென்று ஓரளவாவது விவசாயம் செய்ய மணல் திருட்டை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: