மீன்கள் செத்து மிதந்த சம்பவம் எதிரொலிஅண்ணாமலையார் கோயில் குளங்களில் சுற்றுச்சூழல் நலப்பொறியாளர் ஆய்வு இயற்கை முறையில் தண்ணீரை சுக்திகரிக்க முடிவு

திருவண்ணாமலை, மே 1: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் குளங்களில் மீன்கள் செத்து மிதந்த சம்பவம் தொடர்பாக, மாசுக் கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் நலப்பொறியாளர் மற்றும் அதிகாரிகள் நேரில் ஆய்வு நடத்தினர். இயற்கை முறையில் தண்ணீரை சுத்திகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்தம், 5ம் பிரகாரத்தில் உள்ள சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றில், கடந்த வாரம் ஆயிரக்கணக்கான மீன்கள் திடீரென செத்து மிதந்தன. அதனால், குளங்களில் துர்நாற்றம் வீசியது. எனவே, பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.பின்னர், இரண்டு குளங்களிலும் செத்து மிதந்த மீன்களை தீயணைப்பு வீரர்களின் உதவியுடன், கோயில் ஊழியர்கள் அகற்றினர். அதைத்தொடர்ந்து, திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, எஸ்பி சிபிசக்கரவர்த்தி ஆகியோர், பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.மேலும், இரண்டு குளங்களிலும் இருந்த தண்ணீரை, சென்னை கிண்டியில் உள்ள ஆய்வு மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பருவநிலை மாற்றம் காரணமாக தண்ணீரில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால், மீன்கள் செத்திருக்கலாம் என ஆய்வு அறிக்கையில் தற்போது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து, மாசு கட்டுப்பாடு வாரிய சுற்றுச்சூழல் நலப்பொறியாளர்(ஓய்வு) எம்.பி.ராஜசேகரன், உதவி பொறியாளர்கள் அக்பர், சுகாசினி ஆகியோர் பிரம்ம தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம் ஆகியவற்றை நேரில் ஆய்வு செய்தனர்.அப்போது, கோயில் இணை ஆணையர் ஞானசேகர் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த ஆய்வுப் பணி நடந்தது. அதைத்தொடர்ந்து, நீர்வள ஆய்வாளர் எம்.பி.ராஜசேகரன் கூறுகையில், `குளங்களில் மீன்கள் இறந்த தினத்தன்று அதிகபட்ச ெவயில் பாதித்திருக்கிறது. அன்று மாலை திடீரென மழையும் பெய்திருக்கிறது. இந்த பருவநிலை மாற்றம் காரணமாக மீன்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம். தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிப்பதன் மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும். ஆனால், நாளையும் (இன்று) இதுதொடர்பாக தொடர்ந்து ஆய்வு நடத்த இருக்கிறோம். அதன்பிறகே, இது தொடர்பான இறுதியான அறிக்கையை அளிக்க முடியும். அடுத்தகட்ட நடவடிக்கையை தொடர முடியும்'''' என்றார்.

Related Stories: