ஆரியச்சேரி அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த வீடுவீடாக சென்று ஆசிரியர்கள் அழைப்பு

கும்பகோணம், ஏப். 26: திருவிடைமருதூர் தாலுகா ஆரியச்சேரி நடுநிலைப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்த மாணவர்கள் வீடுவீடாக சென்று அடிப்படை கட்டமைப்பு வசதிகளை எடுத்து கூறி ஆசிரியர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

2019-2020 கல்வியாண்டுக்கான பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்ப்பதற்கு பெற்றோர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரியச்சேரி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியர் மேகலா தலைமையில் ஆசிரியர்கள் கலைசெல்வன், பாரதிராஜா, அனுசியாதேவி, செந்தமிழ்செல்வி, அமுதா, சரோஜா ஆகியோர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதில் தாங்கள் பணியாற்றும் அரசு பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வித்தரம், உள்கட்டமைப்பு, கணினி வசதி, மின்விசிறி, மின்விளக்கு, குடிநீர், சுற்றுப்புற தூய்மை உள்ளிட்ட வசதிகள் உள்ளன என்று ஆரியச்சேரி கிராமத்தில் கடந்த 23ம் தேதி முதல் நேற்று (25ம் தேதி) வரை வீடுகள் தோறும் சென்று தங்களது குழந்தைகளை சேர்க்க தன்னார்வத்துடன் கோடை விடுமுறையையும், வெயிலையும் பொருட்படுத்தாமல் இப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இதுகுறித்து தலைமையாசிரியர் மேகலா கூறுகையில், ஆரியச்சேரி நடுநிலைப்பள்ளியில் கடந்தாண்டு 206 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 26 மாணவர்கள் ஆங்கிலவழி கல்வியிலும், மற்ற மாணவர்கள் தமிழ்வழி கல்வியிலும் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து தரத்துடன் உள்கட்டமைப்பு இருக்கிறது.

இதை கிராம மக்களிடம் எடுத்த கூற வேண்டுமென முடிவு செய்தோம்.கடந்தாண்டுக்கான தேர்வு கடந்த ஏப்ரல் 17ம் தேதி முடிந்தது. கடந்த 22ம் தேதி முதல் நேற்று வரை ஆரியச்சேரி கிராமம் முழுவதும் மாணவர்களை சேர்க்க கிராம மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கியும், பள்ளியில் இருக்கும் அடிப்படை வசதிகளை எடுத்து கூறி அழைப்பு விடுத்து வருகிறோம். பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை உயர்த்த கோடை விடுமுறைக்கு கூட செல்லாமல் அனைத்து ஆசிரியர்களும் இப்பணியில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.

Related Stories: